கூட்டணி ஆட்சியின் குழப்பத்துக்கு பாஜகவை குறை கூறுவது முறையல்ல'
By DIN | Published on : 16th September 2018 03:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கூட்டணி ஆட்சியின் குழப்பத்துக்கு பாஜகவை குறை கூறுவது முறையல்ல என பாஜக மாநில செயலரும், சட்டமேலவை உறுப்பினருமான ரவிக்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: முதல்வர் குமாரசாமி தலையிலான கூட்டணி ஆட்சி பதவி ஏற்றது முதல் பல்வேறு குழப்பங்களையும், பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சியுடன் மஜத கூட்டணி வைத்ததே முதல் குற்றமாகும். கொள்கையில் பொருத்தமில்லாத கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, மூத்த தலைவர்களிடையே ஒற்றுமையில்லாததால் காங்கிரஸ் கட்சி குழம்பிப் போய் உள்ளது.
அமைச்சர் பதவி கிடைக்காததால், இருகட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் ஆதங்கத்தில் உள்ளனர். இதனால் காங்கிரஸ், மஜத கட்சிகளில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில் இது பகிரங்கமாக வெளியாகியுள்ளது. இந்த நிலையில் முதல்வர் குமாரசாமி கூட்டணி அரசின் குழப்பத்துக்கு பாஜக கட்சியே காரணம் எனக் கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது. ஆபரேஷன் கமலா திட்டத்தின் மூலம் காங்கிரஸ், மஜத கட்சிகளிலிருந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்க, பாஜக முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கூட்டணி ஆட்சியை நிலை நிறுத்த முடியாமல் பாஜகவை குற்றம்சாட்டுவது முறையல்ல. இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. இதன்மூலம் முதல்வரின் கட்டுப்பாட்டில், மஜத எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. தனது இயலாமையை மறைக்க அவர் பாஜக மீது குறை கூறி வருகிறார் என்றார் அவர்.