பாஜகவில் இணைந்த முன்னாள் தலைமைச் செயலாளர்
By DIN | Published On : 04th April 2019 09:28 AM | Last Updated : 04th April 2019 09:28 AM | அ+அ அ- |

கர்நாடக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ரத்னபிரபா பாஜகவில் இணைந்தார்.
கலபுர்கியில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தலைமையில் கர்நாடக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ரத்னபிரபா தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு பாஜகவின் கொடியை அளித்து எடியூரப்பா வரவேற்றார்.
இதுகுறித்து ரத்னபிரபா கூறியது: மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றும் நோக்கில் பாஜகவில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். கலபுர்கி மண்டல ஆணையராக நான் பணியாற்றியதால், கலபுர்கியில் பாஜகவில் சேர்ந்துள்ளேன். மேலும் இப்பகுதியை சேர்ந்தபீதர், ராய்ச்சூருவில் நான் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளேன். எவ்வித நிபந்தனையும் இல்லாமல் பாஜகவில் இணைந்துள்ளேன்.
பணி ஓய்வுக்கு பிறகும் மக்கள் சேவையில் ஈடுபடவேண்டும் என்பதற்காகவே பாஜகவில் சேர்ந்துள்ளேன். பிரதமர் மோடியின் செயல்பாடுகள் என்னை கவர்ந்துள்ளன. நமதுநாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பிரதமர் மோடி உழைத்துக் கொண்டிருக்கிறார். உண்மையான தொண்டர்களை அடையாளம் கண்டு, அவர் ஊக்குவிக்கிறார். விவசாயிகளின் நலனுக்கு பங்காற்ற பிரதமர் மோடி பூண்டுள்ள உறுதியை கண்டு வியக்கிறேன். பாஜக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன். மக்களவை தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடுவேன் என்றார்.