பெங்களூரில் 90.83 லட்சம் வாக்காளர்கள்: மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத்பிரசாத்

பெங்களூரில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் 90.83 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக பெங்களூரு

பெங்களூரில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் 90.83 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக பெங்களூரு மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான மஞ்சுநாத்பிரசாத் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பெங்களூரில் தென் பெங்களூரு, மத்திய பெங்களுரு, வடபெங்களூரு ஆகிய 3 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு ஏப்.18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. 3 தொகுதிகளிலும் இறுதிவாக்காளர் பட்டியல்படி மொத்தம் 90.83 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 47.33 லட்சம், பெண்கள் 43.48 லட்சம், பிறர் 1,540 பேர். 
வடபெங்களூரு தொகுதியில் 31 வேட்பாளர்கள், மத்திய பெங்களூரு தொகுதியில் 22 வேட்பாளர்கள், தென் பெங்களூரு தொகுதியில் 25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்பாளர்களின் எண்ணிக்கை 15-ஐ தாண்டியதைத் தொடர்ந்து, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடம்பெற்றிருக்கும்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் தட்டுப்பாடு உள்ளன. எனினும், தட்டுப்பாட்டை ஈடுசெய்வதற்கு வெளிமாநிலங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கேட்டுள்ளோம். ஏப்.5-ஆம் தேதி முதல் தேர்தல் ஊழியர்கள் வீடுவீடாக சென்று தேர்தல் வழிகாட்டுதல்கள் குறித்த சிறிய புத்தகங்களை விநியோகிப்பார்கள்.
ஏப்.11-ஆம் தேதிக்குள் அனைத்து வீடுகளிலும் இந்த நூல் அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளை வாக்குச்சாவடிக்கு அழைத்துவர ஓலா கார் சேவையை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். மாற்றுத் திறனாளிகள் வாகன வசதிக்காக எங்களிடம் முன்பதிவு செய்தால், அதற்கான ஏற்பாடுகளை செய்வோம். 
வட பெங்களூரு மக்களவைத் தொகுதியின் வாக்குகள் புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியிலும், மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியின் வாக்குகள் மவுன்ட்கார்மேல் கல்லூரியிலும், தென் பெங்களூரு மக்களவைத் தொகுதியின் வாக்குகள் எஸ்எஸ்எம்ஆர்வி கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன. 
பெங்களூரில் உள்ள 8500 வாக்குச்சாவடிகளில் 1600 பதற்றமானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கு கூடுதல் கண்காணிப்பு வசதி செய்யப்படுகின்றன. இதற்காக 1200 நுண் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் மத்திய ஊழியர்களாக இருப்பார்கள். 400 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இணையதளத்தில் நேரடியாக ஒளிப்பரப்பப்படும் என்றார்.
அப்போது உடனிருந்த பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் சுனில்குமார் கூறியது: 7528 ஆயுதங்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 156 இடங்கள் பதற்றமானவையாக கண்டறிந்துள்ளோம். இங்கு 2-4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கும். வாக்காளர்களை மிரட்டும் 637 பேரை அடையாளம் கண்டிருக்கிறோம். அவர்களிடம் ரூ.5 லட்சத்திற்கான பத்திரங்களை பெற்றிருக்கிறோம் என்றார். 
முன்னதாக, கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் தலைமையில் பெங்களூரில் மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com