கர்நாடகத்தில் இன்று பிரதமர் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்

பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கர்நாடகத்தில் சனிக்கிழமை தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவிருக்கிறார்கள்.

பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கர்நாடகத்தில் சனிக்கிழமை தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவிருக்கிறார்கள்.
கர்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்.18, ஏப்.23 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக தென் கர்நாடகத்தைச் சேர்ந்த 14 தொகுதிகளுக்கு ஏப்.18ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது.  இதற்கான பகிரங்க பிரசாரம் ஏப்.16ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது.  இதைத் தொடர்ந்து தென் கர்நாடகத்தைச் சேர்ந்த 14 தொகுதிகளிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் விறுவிறுப்பான வாக்குவேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.  பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெகெளடா,  முன்னாள் முதல்வர் சித்தராமையா, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா உள்ளிட்ட பல தலைவர்கள் கர்நாடகத்தின் பல்வேறு தொகுதிகளில் பிரசாரம் செய்து, அவரவர் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்கு திரட்டி வருகிறார்கள். அந்தவகையில்,  பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சனிக்கிழமை (ஏப்.13 ஆம் தேதி) கர்நாடகத்தின்பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவிருக்கிறார்கள்.  கர்நாடகத்திற்கு சனிக்கிழமை வருகைதரும் பிரதமர் மோடி பிற்பகல் 2 மணி அளவில் மங்களூரில் நடக்கவிருக்கும் பாஜக தேர்தல் கூட்டத்தில் பேசுகிறார்.  அதன்பிறகு, பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஏற்பாடு செய்துள்ள பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசவிருக்கிறார்.  இந்த கூட்டங்களில் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சதானந்த கெளடா உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.  பிரதமர் மோடி ஏற்கெனவே கலபுர்கி, சித்ரதுர்கா, மைசூரு, கங்காவதியில் ஏற்பாடு செய்திருந்த பாஜக பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசியது குறிப்பிடத்தக்கது. 
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தியும் சனிக்கிழமை கர்நாடகத்திற்கு வருகைதருகிறார்.  இவர், கோலார், சித்ரதுர்கா, மைசூரு அருகே கே.ஆர்.நகரில் நடைபெறவுள்ள காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகிறார்.  கே.ஆர்.நகரில் நடைபெறும் கூட்டத்தில் முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான எச்.டி.தேவெ கெளடா, முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கலந்துகொண்டு கூட்டு பிரசாரம் செய்யவிருக்கிறார்கள்.  சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு கோலாரிலும்,  மாலை 3 மணிக்கு சித்ரதுர்காவிலும், மாலை 5.30மணிக்கு கே.ஆர்.நகரிலும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் ராகுல்காந்தி பேசவிருக்கிறார்.  இதனால் கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இன்று போக்குவரத்தில் மாறுதல்
பெங்களூருக்கு சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி வருவதையொட்டி போக்குவரத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  பெங்களூருக்கு சனிக்கிழமை (ஏப். 13) பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி வருவதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி பல்லாரி சாலை அரண்மனைத் திடலில் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.  இதனையொட்டி,  பல்லாரி சாலையில் போக்குவரத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.  மேலும்,  தும்கூரு சாலை, கனகபுரா சாலை, பன்னரகட்டா சாலை,  ஒசூர் சாலையிலிருந்து அரண்மனை திடலுக்கு வரும் வாகனங்கள் போக்குவரத்து போலீஸாரின் வழிக்காட்டுதலின்படி செல்ல வேண்டும்.  மேலும்,  பிரதமர் வருகையையொட்டி விமான நிலையச் சாலை உள்ளிட்ட சாலைகள் போலீஸாரின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.  பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு சில இடங்களில் வழக்கமான பாதையை தவிர்த்து, மாற்றுப் பாதையில் சென்று பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com