சுடச்சுட

  

  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மஜத சேரவேண்டும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகார பரவலாக்கல் துறை இணையமைச்சரும், இந்திய குடியரசுக் கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அதாவலே தெரிவித்தார்.
  பெங்களூரில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் மஜத கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது.  காங்கிரஸ் கட்சியினரின் நெருக்கடியால், முதல்வர் குமாரசாமி கண்ணீர் வடித்து வருகிறார்.  எனவே மஜத, காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு,  பாஜகவுடனான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர வேண்டும் என்றார். மேலும்,  மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.  கர்நாடகம் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், பாஜகவை ஆதரிக்க வேண்டும்.  பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வளர்ச்சி அடைய முடியும்.   காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் ஆக கனவு காண்கிறார்.  ஆனால்,  நரேந்திர மோடி இருக்கும் வரை ராகுல் காந்தி பிரதமர் ஆக முடியாது. எதிர்க்கட்சிகள் மகாகூட்டணி அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.  
  ஆனால்,  அதில் உள்ள தலைவர்கள் அனைவரும் பிரதமர் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் பணியாற்றுகின்றனர்.  முன்பு ம.ஜ.த. தலைவர் தேவெ கெளடா பிரதமர் ஆனதை முன்னுதாராணமாக வைத்துக் கொண்டு,  அனைவரும் ஆசைப்படுவது முறையல்ல.  கர்நாடகத்தில் இந்திய குடியரசுக் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்குமாறு பாஜகவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.  பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால்,  கோலார்,  பெங்களூரு ஊரகம்,  சிக்கோடி, பெலகாவி ஆகிய தொகுதிகளில் இந்திய குடியரசுக் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai