சுடச்சுட

  


  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதிர்ச்சியடையாத அரசியல்வாதியாக இருக்கிறார் என்று முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
  இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  பிரதமர் மோடி,  இந்தியா கண்ட மிகச் சிறந்த தலைவர். கடந்த 5 ஆண்டுக் காலமாக மக்கள் நலனுக்கேற்ற ஆட்சியை பிரதமர் மோடி அளித்திருக்கிறார்.  பாஜக அரசின் சாதனைகள் தொடர வேண்டுமானால்,  பிரதமர் மோடிக்கு இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்புத்  தர வேண்டியது நமது கடமையாகும். 
  2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மோடி என்ற மிகச் சிறந்த தலைவரை அளித்தது.  அதேபோன்றதொரு தேர்தல் முடிவை இம் முறையும் மக்கள் வழங்க வேண்டும்.   பிரதமர் மோடி ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் தொடர வேண்டுமென்றால்,  அவரது அரசை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். 
  பொருள் மற்றும் சேவை வரியைச் செயல்படுத்துவதில் கடைப்பிடித்த புதுமையான அணுகுமுறை,  தயாரான ராணுவம்,  உலகத் தலைவர்களுக்கு இணையாக இந்தியாவை முன்னிலைப்படுத்தும் ஆளுமை மிகுந்த தலைமை,  எல்லைப் பாதுகாப்பு,  ஊழலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் போன்றவை பிரதமர் மோடியின் தலைமைக்கு எடுத்துக்காட்டாகும்.   அமைச்சரவை ரிமோட் கன்ட்ரோல் கட்டுப்பாட்டில் இருந்ததால்,  முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாத நிலை இருந்தது.  ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றும் வலுவான தலைமையின் அடிப்படையில் மோடி அரசு செயல்பட்டு வந்துள்ளது.   எல்லையைப் பாதுகாக்க ராணுவத்தினருக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.  இதனால் நாடு பாதுகாப்பாக உள்ளது. 
  பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தரக்குறைவாக விமர்சித்து வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.  இதுதொடர்பாக ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  காங்கிரஸ் தலைவர் முதிர்ச்சியடையாத அரசியல்வாதியாக உள்ளார்.  ராகுல் காந்தி பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. 
  மண்டியா மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் சுமலதாவுக்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது.   கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் அத் தொகுதியில் பாஜகவுக்கு 2.5 லட்சம் வாக்குகள் கிடைத்தன.  எனவே, இத் தொகுதியில் சுமலதா வெல்வது உறுதி.  மண்டியாவில் நடந்துவரும் நிகழ்வுகள் முதல்வர் குமாரசாமிக்கு பாதகமாக உள்ளன.  இதனால் மஜத வேட்பாளராகப் போட்டியிடும் நிகில் குமாரசாமிக்கு வெற்றி கிடைக்காது என்பதால்,  முதல்வர் குமாரசாமி நம்பிக்கையை இழந்துவருகிறார். மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவான அலை வீசி வருகிறது.  காங்கிரஸில் வாரிசுகளின் அடிப்படையில்தான் தலைவர்கள் உருவாகிறார்கள். பாஜகவில் தகுதிக்குத் தான் முன்னுரிமை. இதனால்தான் காங்கிரஸிலிருந்து நான் விலகினேன்.  மத்தியில் நிலையான ஆட்சியைக் கொண்டுவர பாஜகவுக்கு வாக்களிக்க கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai