மஜதவுடன் தொடர்புடையோர் வீடுகளில் வருமான வரி சோதனை

மண்டியா, ஹாசன் மாவட்டங்களில் மஜதவுடன் தொடர்புடையோர் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. 


மண்டியா, ஹாசன் மாவட்டங்களில் மஜதவுடன் தொடர்புடையோர் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. 
கர்நாடகத்தில் மக்களவைக்கு முதல்கட்டமாக ஏப்.18-ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கும் மண்டியா, ஹாசன் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கெளடாவின் பெயரனும், அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ஹாசன் தொகுதியிலும்; முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில்குமாரசாமி மண்டியா தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். 
இந்நிலையில், மண்டியா, ஹாசன் மாவட்டங்களில் மஜதவுடன் தொடர்புடையோரின் வீடுகளில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். தலா 15 அதிகாரிகள் கொண்ட 4 அணியினர் வருமானவரிசோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்குள்ளானோரில் பெரும்பாலானோர் மஜத தலைவர்கள் எச்.டி.தேவெ கெளடா, முதல்வர் குமாரசாமிக்கு நெருக்கமானோர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையின்போது கர்நாடக காவல் துறையினருக்கு பதிலாக, மத்திய ஆயுத காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது கவனத்தை ஈர்த்தது.
இந்த சோதனை குறித்து முதல்வர் குமாரசாமி கூறுகையில்,பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதற்காக வருமானவரித் துறையை மத்திய பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்றார். இதேபோல, காங்கிரஸ் கட்சியும் வருமான வரி சோதனையை விமர்சித்துள்ளது.
வருமான வரி சோதனை நடத்துவதை கண்டித்து கடந்த மார்ச் 28-ஆம் தேதி பெங்களூரில் உள்ள வருமானவரித் துறை அலுவலகம் முன் முதல்வர் குமாரசாமி, துணைமுதல்வர் ஜி.பரமேஸ்வர், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 
இதுகுறித்து வருமான வரித் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஹாசன், மண்டியா, பெங்களூரு மாவட்டங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. வருமானவரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக உளவுப் பிரிவின் வாயிலாக கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் சோதானை நடத்தப்பட்டது. சோதனை நடத்தப்பட்டோரில் மனைத் தொழில், கல்குவாரி, ஜல்லி உடைப்பு, அரசு ஒப்பந்ததாரர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், மர ஆலைகள், கூட்டுறவுவங்கிகளை நிர்வகிப்போர் அடங்குவர். 
ஹாசனில் 5 வீடுகளிலும், பெங்களூரில் ஒரு இடத்திலும், மண்டியாவில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com