கர்நாடகத்தில் 14 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தேர்தல்

கர்நாடகத்தில் முதல்கட்டமாக 14 மக்களவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை(ஏப்.18) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கர்நாடகத்தில் முதல்கட்டமாக 14 மக்களவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை(ஏப்.18) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் 241 வேட்பாளர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க சுமார் 2.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 
கர்நாடகத்தில் உள்ள மொத்தம் 28 தொகுதிகளில் முதல்கட்டமாக நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் உடுப்பி, ஹாசன், தென்கன்னடம், சித்ரதுர்கா, தும்கூரு, மண்டியா, மைசூரு, சாமராஜ்நகர், ஊரக பெங்களூரு, வடபெங்களூரு, மத்திய பெங்களூரு, தென் பெங்களூரு, சிக்பளாப்பூர், கோலார் ஆகிய 14 தொகுதிகளிலும் மொத்தம் 2,67,51,893 பேர் வாக்களிக்க உள்ளனர். 
இதில் ஆண்கள் 1,35,45,818, பெண்கள் 1,32,03,258, மூன்றாம் பாலினத்தார் 2,817, அரசு ஊழியர்(அஞ்சல் வழி வாக்காளர்கள்) 43,337 அடங்குவர். காங்கிரஸ்-மஜத கூட்டணி, பாஜக இடையே இருமுனை போட்டி நிலவினாலும், பகுஜன்சமாஜ், சிவசேனா, உத்தம பிராகீய கட்சி, இந்திய கிறிஸ்துவ முன்னணி, கர்நாடக தொழிலாளர் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி, அம்பேத்கர் சமாஜ் கட்சி, ரிபப்ளிகன் சேனா, பிரமிட் பார்டி ஆஃப் இந்தியா, எஸ்யூசிஐ(சி) கட்சி, கன்னடசலுவளி வாட்டாள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்ற கட்சிகளும் போட்டியிடுகின்றன. 
காங்கிரஸ் மற்றும் மஜத ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. 14 தொகுதிகளில் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், மஜத 4 தொகுதிகளிலும், பாஜக 13 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மண்டியா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் நடிகை சுமலதாவுக்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது. 14 தொகுதிகளில் மொத்தம் 241 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 224 பேர் ஆண்கள், 17 பேர் பெண்கள் அடக்கம்.
வேட்பாளர்கள்
14 தொகுதிகளில் மொத்தம் 241 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். உடுப்பி மக்களவைத் தொகுதியில் 12 வேட்பாளர்கள், ஹாசன் தொகுதியில் 6, தென் கன்னட தொகுதியில் 13, சித்ரதுர்கா தொகுதியில் 19, தும்கூரு தொகுதியில் 15, மண்டியா தொகுதியில் 22, மைசூரு தொகுதியில் 22,சாமராஜ்நகர் தொகுதியில் 10, ஊரக பெங்களூரு தொகுதியில் 15, வட பெங்களூரு தொகுதியில் 31, மத்திய பெங்களூரு தொகுதியில் 22, தென் பெங்களூரு தொகுதியில் 25, சிக்பளாப்பூர் தொகுதியில் 15, கோலார் தொகுதியில் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் வட பெங்களூரு தொகுதியில் அதிகபட்சமாக 31, குறைந்தபட்சமாக ஹாசன் தொகுதியில் 6 பேரும் போட்டியிடுகிறார்கள்.
முக்கிய தலைவர்கள் போட்டி
மக்களவைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவ கெளடா(தும்கூரு), முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் ராகவேந்திரா (சிவமொக்கா), முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில்குமாரசாமி(மண்டியா), மத்திய அமைச்சர் சதானந்த கெளடா(வடபெங்களூரு ), முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவின் பெயரன் பிரஜ்வல்(ஹாசன்), முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி(சிக்பளாப்பூர்), முன்னாள் மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பா(கோலார்) உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.
இதில் எச்.டி.தேவெ கெளடா, கே.எச்.முனியப்பா உள்ளிட்டோர் 4 முறைக்கு மேல் வெற்றிபெற்றவர்கள். கோலார் தொகுதியில் போட்டியிடும் கே.எச்.முனியப்பா 8-ஆவதுமுறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டு வேறு துறைகளை சேர்ந்த  நடிகை சுமலதா(மண்டியா), நடிகர் பிரகாஷ்ராஜ்(மத்திய பெங்களூரு) உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
தேர்தல் ஏற்பாடுகள்
மாநிலம் முழுவதும் 30,197வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6,318 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும், 23,879 வாக்குச்சாவடிகள் சாதாரணமானவையாகவும் கண்டறியப்பட்டுள்ளன. 20,185 வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிவறை, மின்சாரம், சாய்வுநடைபாதை போன்ற குறைந்தபட்ச வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. 
பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் 393 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய முறையிலான வாக்குச்சாவடிகள் 32, மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வாக்குச்சாவடிகள் 61 அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளை வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு அழைத்துவர சிறப்பு வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இத்தேர்தலில் 52,112 மின்னணு வாக்கு இயந்திரங்களும், 36,196 வாக்கு அலகுகளும், 37,705 வாக்கு ஒப்புகைச்சீட்டு அலகுகளும் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் பணியில் 1,54,262பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 38,597 போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல்பணியில் மொத்தம் 7,727 வாகன ஊழியர்கள், 10, 819 பிற ஊழியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். மொத்தத்தில் 2,11,405 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள்.
வாக்காளர் பட்டியல்
வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் காண  w‌w‌w.​c‌e‌o‌k​a‌r‌n​a‌t​a‌k​a.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்தில் காணலாம். சுனாவனா என்ற செல்லிடப்பேசி செயலி வாயிலாகவும் வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி, வேட்பாளர் விவரங்கள், மாற்றுத்திறனாளிகள் வாகனமுன்பதிவு போன்ற தகவல்களை பெறலாம். தேர்தல் தொடர்பான புகார்களையும் இந்த செயலி வழியாக பதிவுசெய்யும் வசதி உள்ளது.
சான்று ஆவணங்கள்
வாக்காளர்கள் வாக்களிக்க புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு செல்லவேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் பின்வரும் சான்று ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கொண்டு சென்றால் மட்டுமே வாக்களிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சான்று ஆவணங்களின் பட்டியல் வருமாறு: கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்), ஓட்டுநர் உரிமம், மத்திய-மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, வங்கி/அஞ்சலகம் வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய சேமிப்புக்கணக்கு புத்தகம், நிரந்தரகணக்குஎண்(பான்)அட்டை, தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்தில் ரிஜிஸ்டர் ஜெனரல் ஆஃப் இந்தியா வழங்கிய ஸ்மார்ட் அட்டை, மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்ட வேலை அட்டை, தொழிலாளர் நலத்துறை வழங்கியுள்ள சுகாதார காப்பீடு ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் வழங்கியுள்ள அலுவலக அடையாள அட்டைகள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடும் போட்டி
முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில்குமாரசாமி மஜத வேட்பாளராக மண்டியா தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவி நடிகை சுமலதா களமிறங்கியிருக்கிறார். நிகில் குமாரசாமிக்கும் சுமலதாவுக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. 
நிகில்குமாரசாமிக்கு காங்கிரஸ்-மஜத கூட்டணியின் ஆதரவு இருந்தாலும், பாஜகவின் ஆதரவில் சுமலதா தீவிர பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார். இதனால் மண்டியா நட்சத்திரத் தொகுதியாக பரிணமித்துள்ளது. மேலும் இத்தொகுதியின் முடிவை நாடே எதிர்பார்க்கும்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல, முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா, வழக்கமாக போட்டியிடும் ஹாசன் தொகுதியை தனது பெயரன் பிரஜ்வலுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு முதல்முறையாக தும்கூரு தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு அவருக்கு பாஜக வேட்பாளர் ஜி.எஸ்.பசவராஜ் கடுமையான போட்டியை அளித்துள்ளார். 


"அமைதியாக தேர்தலை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன'
பெங்களூரில் கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் கூறியது: மக்களவைத் தேர்தலை அமைதியாகவும், நடுநிலையோடும், நியாயமான முறையிலும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் அதிக எண்ணிக்கையில் மக்கள் வாக்களிக்க முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். எல்லா வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 
எனவே, பயமில்லாமல் மக்கள் வாக்களிக்க வரவேண்டும். தேர்தலில் வாக்களிப்பதற்கு வசதியாக எல்லா அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகளை மே 23-ஆம் தேதிவரை பாதுகாப்பாக வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com