ஏழைகளுக்கு 10 கிலோ இலவச அரிசி: சித்தராமையா வாக்குறுதி
By DIN | Published On : 21st April 2019 05:56 AM | Last Updated : 21st April 2019 05:56 AM | அ+அ அ- |

மீண்டும் முதல்வரானால் ஏழை குடும்பத்தினருக்கு தலா 10 கிலோ இலவச அரிசியை வழங்குவேன் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெல்லாரி மாவட்டத்துக்குள்பட்ட சிருகுப்பா பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது:
கர்நாடகத்தில் முந்தைய காங்கிரஸ் அரசில் நான் முதல்வராக இருந்தபோது, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 7 கிலோ அரிசியை இலவசமாக வழங்கினேன்.
மத்தியில் உள்ள 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஒருகிலோ அரிசியை ஏழைகளுக்கு இலவசமாக பிரதமர் நரேந்திர மோடி கொடுத்திருப்பாரா? ஏழைகள் இரு வேளை உண்ண வேண்டும் என்றும் பசியோடு இரவில் உறங்கச் செல்லக் கூடாது என்றும் கருதி அன்னபாக்கியா திட்டத்தை கொண்டுவந்து ஏழைகளுக்கு இலவச அரிசி கொடுத்தேன். மீண்டும் முதல்வரானால், ஏழைகளுக்கு தலா 10 கிலோ அரிசியை இலவசமாக அளிப்பேன்.
கர்நாடகத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.8,126கோடி மதிப்பிலான பயிர்க்கடனை தள்ளுபடி செய்தேன். கடுமையான வறட்சி காணப்பட்டதால், பயிர்க்கடனை தள்ளுபடி செய்யுமாறு கேட்டு பிரதமர் மோடியிடம் அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்துசென்றேன். ஆனால் மோடி நிறைவேற்றவில்லை.
மோடியின் ஆட்சிக் காலத்தில் ஏழைகள் நல்லகாலத்தை காணவே இல்லை. பணக்காரர்களுக்காக மட்டுமே மோடி ஆட்சியை நடத்தி வருகிறார். மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் மோடி பேசி வருகிறார்.
காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் மீது 12 துல்லியத் தாக்குதல்களை செய்ததோடு, 4 போர்களில் ஈடுபட்டு வென்றிருக்கிறோம். ஒரே துல்லியத் தாக்குதலை மட்டும் முன்னிலைப்படுத்தி நாட்டின்பாதுகாப்பு குறித்து மோடி பேசி வருகிறார் என்றார் சித்தராமையா.