விதிமீறும் கட்டுமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை தேவை: கர்நாடக கட்டுமானத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

விதிகளை மீறும் கட்டுமானநிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.


விதிகளை மீறும் கட்டுமானநிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பல்வேறு தொழிற்சங்கங்களின் தொடர் போராட்டத்தின்காரணமாக,  1996ஆம் ஆண்டில் கட்டடத் தொழிலாளர்களுக்காகத் தனியொரு பாதுகாப்புக்காக கட்டடம்,  இதர கட்டுமானத்தொழிலாளர்கள்(பணி ஒழுங்குமுறை,  சேவை நிலை)சட்டத்தைக் கொண்டுவந்தனர்.  அந்தச் சட்டம் 2006ஆம் ஆண்டு முதல் கர்நாடகத்தில் அமல்படுத்தப்பட்டது.  இதனால் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வாரியம் அமைக்கப்பட்டது. 
தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், குழந்தைகளுக்கு கல்வி பயில்வதற்காக, திருமண உதவி,  மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான சலுகைகள் வழங்கிக்கொண்டிருக்கிறது. வாரியத்தால் பல லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்துவந்துள்ளனர்.
இந்தச் சட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்குக் கட்டுமானத்தலத்தில் செய்திருக்க வேண்டிய வசதிகள் குறித்தும் கூறப்படுகிறது. இதைமீறும் கட்டுமான நிறுவனங்களுக்கு எப்படிப்பட்ட தண்டனைகள் அளிக்க வேண்டும் என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது. 
பணியின்போது தொழிலாளர்களுக்கு தலைகவசம், பாதுகாப்பு பெல்ட், கம் பூட்ஸ், பாதுகாப்பு வலை போன்றவற்றை வழங்க வேண்டும். இதை பொருள்படுத்தாமல் தொழிலாளர்களின் நலனை கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்து அலட்சியம் செய்துவருகின்றன. அதன்விளைவாகவே, கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி பெங்களூரு, யஷ்வந்த்பூரில் புதிதாக கட்டப்பட்டுவரும் வாகன நிறுத்த கட்டடம் இடிந்த விழுந்ததில் 2 தொழிலாளர்கள் இறந்துள்ளனர், 19க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். 
தொழிலாளர்கள் நலனில் அக்கறை இல்லாமல், குறைந்த ஊதியத்துக்கு, அதிக நேரம் வேலைவாங்கும் கட்டுமான நிறுவனங்கள்  மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இந்தவிவகாரத்தில் தொழிலாளர்நலத்துறை தலையிட்டு கட்டுமானத்தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்க வகைசெய்ய வேண்டும். அதேபோல, விதிகளைமீறி செயல்பட்டுவரும் கட்டுமான நிறுவனங்கள் மீதுசட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com