கர்நாடகம்: 14 தொகுதிகளில் 67.21 சதவீத வாக்குப்பதிவு

கர்நாடகத்தில் இரண்டாம் கட்டமாக செவ்வாய்க்கிழமை 14 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 67.21 சதவீதம் வாக்குகள் பதிவாயின.
கர்நாடகம்: 14 தொகுதிகளில் 67.21 சதவீத வாக்குப்பதிவு


கர்நாடகத்தில் இரண்டாம் கட்டமாக செவ்வாய்க்கிழமை 14 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 67.21 சதவீதம் வாக்குகள் பதிவாயின.
கர்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக உடுப்பி,  ஹாசன், தென் கன்னடம், சித்ரதுர்கா, தும்கூரு, மண்டியா, மைசூரு, சாமராஜ்நகர், ஊரக பெங்களூரு, வட பெங்களூரு, மத்திய பெங்களூரு, தென் பெங்களூரு, சிக்பளாப்பூர், கோலார் ஆகிய 14 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.18-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இரண்டாம் கட்டமாக சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா, கலபுர்கி, ராய்ச்சூரு, பீதர், கொப்பள், பெல்லாரி,  ஹாவேரி, தார்வாட், வட கன்னடம், தாவணகெரே, சிவமொக்கா ஆகிய 14 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 67.21 சதவீதம் வாக்குகள் பதிவாயின. 
கடுமையான வெயிலையும் பொருள்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர்.  ஒருசில சம்பவங்களைத் தவிர,  மாநிலத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.  14 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்-மஜத கூட்டணி,  பாஜக, பகுஜன் சமாஜ்,  சிவசேனா, உத்தம பிராகீய கட்சி, எஸ்யூசிஐ(சி) உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 237 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  34,548 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  2,03,591 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வாக்குப் பதிவு: கர்நாடகத்தில் உள்ள  2,67,51,893 வாக்காளர்களில் 65 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.  இவர்கள் வாக்களிப்பதற்காக 28,022 வாக்குச்சாவடிகளும்,  33,626 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும்,  48,394 வாக்கு அலகுகளும், 35,028 வாக்கு ஒப்புகைச்சீட்டு அலகுகளும் பயன்படுத்தப்பட்டிருந்தன. 
கடந்த மக்களவைத் தேர்தலில் சோதனை முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த ஒப்புகைச் சீட்டுமுறை, இத் தேர்தலில் 14 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர் உறுதி செய்யும் நடைமுறை இது.  இதற்கு வாக்காளர்கள் இடையே நல்ல வரவேற்பு இருந்தது.  
காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியது.  முதல்முறையாக வாக்குரிமை பெற்றிருக்கும் 18 வயது நிரம்பிய இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்குத் திரண்டனர்.  பெண்கள், முதியோர், ஊனமுற்றோர் போன்ற அனைத்துத் தரப்பினரும் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
காலையில் உற்சாகமாக இருந்த வாக்குப் பதிவு நண்பகல் வெயில் அதிகமானதும் மந்தமானது.  பின்னர் மாலையில் மீண்டும் வாக்குப்பதிவு சூடு பிடித்தது.  காலை 9 மணிக்கு 7.38 சதவீதமாக இருந்த வாக்குப் பதிவு, காலை 11மணிக்கு 20.65 சதவீதமும், நண்பகல் 1 மணிக்கு 36.61 சதவீதமும், மாலை 3 மணிக்கு 49.96 சதவீதமும் மாலை 5 மணிக்கு 60.42 சதவீதமும் பதிவாயின. மாலை 6 மணியுடன் நிறைவடைந்த தேர்தலில் 65 சதவீதம் வாக்குகள் பதிவாயின.  
தலைவர்கள் வாக்களிப்பு: மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய இணையமைச்சர்கள் அனந்த்குமார் ஹெக்டே, ரமேஷ் ஜிகஜினகி, மாநில அமைச்சர்கள் எம்.பி.பாட்டீல்,  சதீஷ் ஜார்கிஹோளி, பிரியாங்க் கார்கே, பண்டேப்பா காஷெம்பூர், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, பாஜக முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, முன்னாள் மத்திய அமைச்சர்ஜி.எம்.சித்தேஸ்வர்,  மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் உமேஷ் ஜாதவ், ராகவேந்திரா, மது பங்காரப்பா,  ஈஸ்வர் கண்ட்ரே, வினய் குல்கர்னி, சுரேஷ் அங்கடி,  பிரகாஷ் ஹுக்கேரி, பிரஹலாத் ஜோஷி, முன்னாள் அமைச்சர்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, சாமனூர் சிவசங்கரப்பா,  பி.ஸ்ரீராமுலு உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தங்கள் குடும்பத்துடன் வாக்களித்தனர்.
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கலபுர்கி, யாதகிரி, வட கன்னடம், கொப்பள், பாகல்கோட், பீதர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பலர் அதிருப்தியடைந்தனர்.  இதனால் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  சில இடங்களில் போராட்டமும் நடைபெற்றது.  சில வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால்,  வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. 
விஜயபுரா மாவட்டத்தின் இன்டி வட்டத்தைச் சேர்ந்த இரசங்கா கிராமத்தில் வாக்களித்துவிட்டு வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்த மகாதேவி எம்.சிந்தக்கா(55)  திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக மருத்துவர்கள்
தெரிவித்தனர். 
தேர்தல் புறக்கணிப்பு: குடிநீர், சாலை, மின்சாரம், போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து தராததைக் கண்டித்து தாவணகெரே மாவட்டத்தின் போரகொண்டனஹள்ளி,  பீதர் மாவட்டத்தின் சுல்தான்பூர் கிராமத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர்.


கூட்டணி அரசு கவிழும்
 மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடகத்தில் மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும்  என்று கர்நாடக பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
சிவமொக்கா மாவட்டம்,  ஷிகாரிபுராவில் செவ்வாய்க்கிழமை வாக்களித்தப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.  தேர்தல் முடிவுக்குப் பிறகு மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்வது உறுதி.  மக்களவைத் தேர்தலில் மஜத, காங்கிரஸ் கட்சியினரிடையே வெளிப்படையாக பிளவு ஏற்பட்டது.  இதனால் இரு கட்சிகளிடையே புரிதல் இல்லாமல் பிரச்னை உருவாகி, ஆட்சிக் கவிழ்வதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது.  தேர்தல் முடிவுக்குப் பிறகு ஆட்சி கவிழும். 
ஆனால்,  ஆபரேஷன் கமலா திட்டத்தில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவினர் முயற்சிப்பதாக ஆளும் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.  கூட்டணி அரசில் அப்பா,  மகன் (தேவெ கெளடா,  குமாரசாமி)  தலையீட்டை சகித்துக் கொள்ள முடியாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், அக் கட்சியிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர். 
காங்கிரஸ் கட்சியில் உள்ள 20 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் குமாரசாமியின் தலைமையை ஏற்க மறுக்கின்றனர்.  மக்களவைத் தேர்தலில் பாஜக 22 தொகுதிகளில் வெற்றி பெறும்.  காங்கிரஸ்- மஜத கூட்டணிக் கட்சிகள் இரட்டை இலக்கத் தொகுதிகளில்கூட வெற்றி பெறாது.  கலபுர்கியில் உமேஷ் ஜாதவும்,  சிவமொக்காவில் பி.ஒய்.ராகவேந்திராவும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவர் என்றார்.

கூட்டணி அரசு பலமடையும்
 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கர்நாடகத்தில் கூட்டணி அரசு பலமடையும் என்று காங்கிரஸ் கட்சியின் பிரசார குழுத் தலைவர் எச்.கே.பாட்டீல் தெரிவித்தார். கர்நாடக மாநிலம், கதக் மாவட்டம், ஹுளகோட்டையில் தனது சகோதரர் டி.ஆர்.பாட்டீலுடன் சென்று வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
தேசிய அளவில் பிரதமர் மோடியின் அலை உள்ளதாக பாஜகவினர் பொய்யான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நகரங்களில் வேண்டுமானால் பிரதமர் மோடிக்கு ஆதரவு இருக்கலாம். ஆனால், கிராமங்களில் மோடிக்கு எதிரான அலை உள்ளதை யாரும் மறுப்பதற்கில்லை. கதக் மக்களவைத் தொகுதியில் ஊரக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த டி.ஆர்.பாட்டீலுக்கு மக்களிடத்தில் அமோக ஆதரவு உள்ளது. எனவே, தேர்தலில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெறுவார். 
பெலகாவி, பாகல்கோட்டை, கலபுர்கி உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு பிறகு கூட்டணி அரசு கவிழும் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். அவர்கள் கற்பனை உலகத்தில் நடப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். 
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு பலமடையும். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அலை வீசி வருகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்றார்.

பாஜகவின் கனவு பலிக்காது
மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க முயற்சிக்கும் பாஜகவின் கனவு பலிக்காது என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், கலபுர்கியில் செவ்வாய்க்கிழமை மக்களவைத் தேர்தலில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மக்களவைத் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது. கூட்டணி அரசை கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் பலிக்காது. 
காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிஹோளி தனது பதவியை ராஜிநாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. தேர்தல் தினத்தன்று பாஜகவினர் இது போன்ற பரபரப்பு செய்தியை வெளியிட்டு அரசியல் ஆதாயத்தை தேட முயற்சிக்கின்றனர். கர்நாடகத்தில் மதச்சார்பற்ற 2 கட்சிகள் ஒன்றிணைந்து சிறப்பான ஆட்சியை வழங்கி வருகின்றன.
கூட்டணி ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இன்னும் 4 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி தொடரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கூட்டணி அரசு பொறுப்பேற்றதிலிருந்தே, ஆட்சியைக் கவிழ்க்க பாஜக மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்து வருகின்றது. இனியும் அது தொடரும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com