மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக மீண்டும் முயற்சி?

 கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜகவில் இணைத்து மீண்டும் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக


 கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜகவில் இணைத்து மீண்டும் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு 104, காங்கிரஸýக்கு 80, மஜதவுக்கு 37 இடங்கள் கிடைத்தன. ஆட்சி அமைக்க பாஜகவுக்கு தேவையான 113 பெரும்பான்மை கிடைக்காததால் மஜதவும், காங்கிரஸýம் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றின. முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடையவிருக்கிறது. 
104 இடங்களில் வென்று, 9 இடங்கள் குறைவாக இருந்த காரணத்தால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்ததை பாஜகவாலும், அக்கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பாவாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது மற்றொரு முறை முதல்வராகிவிட வேண்டும் என்ற துடிப்பில் உள்ள எடியூரப்பா, மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பாஜகவுக்கு சாதகமாக அமைந்தால், காங்கிரஸிலிருந்து எம்எல்ஏக்களை இழுத்து, மஜத-காங்கிரஸ் கூட்டணியைக் கவிழ்க்க திட்டம் வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதற்கேற்ப காங்கிரஸ் கட்சியிலும் ஏற்பட்டுள்ள ஒருசில அரசியல் குழப்பங்கள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளன. மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக இருமுறை முயற்சிகளை மேற்கொண்டது. ஆனாலும், எதிர்பார்த்த எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் மஜத மற்றும் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு செல்லவில்லை. இதனால் அந்த இரு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. ஆனாலும், தற்போது எடுத்துள்ள 3-ஆவது முயற்சி கைக்கூடும் என்ற நம்பிக்கை பாஜகவின் முன்னணித் தலைவர்களிடையே காணப்படுகிறது.
தன்னிடம் இருந்து அமைச்சர் பதவியைப் பறித்துக் கொண்டு தனது சகோதரர் சதீஷ் ஜார்கிஹோளிக்கு அமைச்சர் பதவியை அளித்ததால் அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிஹோளி, தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் வெளிப்படையாகவே பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நடந்த காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழு கூட்டம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த ரமேஷ் ஜார்கிஹோளி, அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள, தனக்கு ஆதரவாக உள்ள உமேஷ்ஜாதவ், பி.நாகேந்திரா, மகேஷ் குமட்டஹள்ளி ஆகியோருடன் மும்பையில் முகாமிட்டு, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா உள்ளிட்டோருடன் பாஜகவில் சேருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 
இந்த 4 பேரில் உமேஷ் ஜாதவ், தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து, மக்களவைத் தேர்தலில் கலபுர்கி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். 
மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததும், தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பி.நாகேந்திரா, மகேஷ்குமட்டஹள்ளி, ரமேஷ்ஜார்கிஹோளி, பி.சி.பட்டேல், ஜே.என்.கணேஷ், பீம்நாயக் உள்ளிட்டோர் தயாராக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
இவர்களைத் தவிர, மேலும் பல எம்எல்ஏக்களை காங்கிரஸ், மஜதவில் இருந்து இழுக்க பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா வியூகம் அமைத்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படவிருக்கின்றன. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதகாலம் இருப்பதால், அதற்குள் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை இழுப்பதற்கான அடிப்படை வேலைகளில் ஈடுபட எடியூரப்பா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
இந்த நம்பிக்கையில்தான் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் என்று பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா அடிக்கடி கூறிவருகிறார். மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, மத்தியில் பாஜக ஆட்சி அமையுமானால், அடுத்த 24 மணி நேரத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்த்துவிட்டு, பாஜக ஆட்சியை மீண்டும் கொண்டுவர எடியூரப்பா திட்டம் வகுத்துள்ளதாக அக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com