முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
ஏழை மாணவருக்கு கல்வி நிதியுதவி
By DIN | Published On : 04th August 2019 05:15 AM | Last Updated : 04th August 2019 05:15 AM | அ+அ அ- |

பெங்களூரைச் சேர்ந்த ஏழை மாணவர் ஒருவருக்கு இந்தியப் பேனா நண்பர் பேரவையின் சார்பில் ரூ.10 ஆயிரம் நிதியுதவிஅளிக்கப்பட்டது.
இந்தியப் பேனா நண்பர் பேரவையின் சார்பில், பெங்களூரு, பிரையாண்ட் சதுக்கத்தில் உள்ள புனித வளனார் பியூ கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அப்பள்ளியில் முதலாமாண்டு பியூசி பயிலும் ஏழை மாணவர் ஜேரோமுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி நிதியுதவிஅளிக்கப்பட்டது. மாணவருக்கு ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையைப் பள்ளியின் தாளாளர் மரியகிரிகோரி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் புனித வளனார் உயர்நிலைப் பள்ளி முதல்வர் என்.ஜோசப், பியூ கல்லூரி துணை முதல்வர் ஆரோக்கியநாதன், இந்தியப் பேனா நண்பர் பேரவையின் கர்நாடக மாநில கிளை அமைப்பாளர் ஜெ.ஜேசுதாஸ், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சிவக்குமார், வி.கிப்சன், ஜி.ஜெயராஜ், மலர்வண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து ஜெ.ஜேசுதாஸ் கூறுகையில்,மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியப் பேனா நண்பர் பேரவை, ஒரு சமூக அறக்கட்டளையாகும். எங்கள் அமைப்புக்கு மும்பை தவிர, தமிழகம், கர்நாடகம், கோவா, அஸாம் உள்ளிட்ட மாநிலங்கள், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் கிளைகள் அமைந்துள்ளன. அன்பு, நட்பு, மனிதநேயத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படும் எங்கள் அமைப்பு, ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி, நோயாளிகளுக்கு மருத்துவ நிதியுதவி உள்ளிட்ட உதவிகளை செய்து வருகிறது. நட்புச் சங்கமம் என்ற பெயரில் உலக மாநாட்டை நடத்திவருகிறது. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது. ஆதரவற்றோர், மனநலம் குன்றியோர், முதியோர் இல்லங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. மாணவர்களிடையே குறைந்துவரும் கடிதம் எழுதும் வழக்கத்தை மீண்டும் புதுப்பிக்க கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி நடத்தி ரூ.30 ஆயிரம் வரையில் பரிசுகளை வழங்கியிருந்தோம். நிகழாண்டிலும் அப்போட்டியை நடத்துவதற்கான தேதியை விரைவில் அறிவிப்போம் என்றார் அவர்.