முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
கர்நாடகத்தில் அரசு இயந்திரம் முழுமையாக முடங்கியுள்ளது: சித்தராமையா
By DIN | Published On : 04th August 2019 05:16 AM | Last Updated : 04th August 2019 05:16 AM | அ+அ அ- |

கர்நாடகத்தில் அரசு இயந்திரம் முழுமையாக முடங்கியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.
இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: முந்தைய மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசின்போது அறுதிப்பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வற்புறுத்தி அன்றைய முதல்வர், பேரவைத் தலைவருக்கு கடிதங்களாக அனுப்பிக் கொண்டிருந்தார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சி மற்றும் வெள்ளம் ஏற்பட்டு, மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாநிலத்தில் ஒருநபர் அமைச்சரவையை வைத்துக்கொண்டு மக்களின் இன்னல்களைப் போக்க முடியுமா? என்பதைப் பற்றி ஆளுநர் அறியாமல் இருப்பது ஏனோ? கர்நாடகத்தில் அரசு இயந்திரம் முழுமையாக முடங்கியுள்ளது. இது ஜனநாயகமா? அல்லது சர்வாதிகாரமா? என்பது புரியவில்லை. முதல்வராக பதவியேற்க அவசரம் காட்டிய எடியூரப்பா, அதே வேகத்தை அமைச்சரவையை விரிவாக்க காட்டாதது ஏன்? வறட்சி மற்றும் வெள்ளத்தால் மக்கள் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும்போது அவற்றுக்கு தீர்வுகாண அமைச்சரவை தேவையில்லையா? வறட்சி மற்றும் வெள்ளப் பாதிப்புகளைக் கையாள வேண்டிய வருவாய், விவசாயம், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளுக்கு அமைச்சர்களே இல்லை. முதல்வர் எடியூரப்பா ஒருவர் மட்டுமே அங்கம் வகிக்கும் அமைச்சரவையில் மக்கள் படும் துன்பங்கள் ஆளுநரின் கண்ணில் படவில்லையா? என்று அவர் கேட்டிருக்கிறார்.
இதனிடையே, கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ் தனது சுட்டுரைப் பக்கத்தில்,அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதில் கால தாமதம் செய்வது ஏன்? மாநிலத்தில் அமைந்துள்ள புதிய அரசின் நிர்வாகம் செயல்படத் தொடங்கவே இல்லை. முதல்வராகப் பதவியேற்ற எடியூரப்பாவுக்கு 8 நாட்கள் கழிந்துள்ளன. இன்னும் அமைச்சரவையை விரிவாக்காமல், அவர் மட்டுமே அமைச்சரவையில் நீடித்துவருகிறார். அமைச்சரவையை விரிவாக்குவதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. தனது தலைமையிலான ஒருநபர் அமைச்சரவையையே மேலும் சில நாள்களுக்கு கடத்த முதல்வர் எடியூரப்பா திட்டமிட்டிருப்பதுபோல தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.