முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ பாஜகவில் சேரத் திட்டம்?
By DIN | Published On : 04th August 2019 05:14 AM | Last Updated : 04th August 2019 05:14 AM | அ+அ அ- |

பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ என்.மகேஷ், வெகுவிரைவில் பாஜகவில் சேரத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வர் குமாரசாமி, கர்நாடக சட்டப்பேரவையில் ஆக.23ஆம் தேதி தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்திய போது, கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே எம்எல்ஏவான என்.மகேஷுக்கு அக்கட்சியின் தலைவர் மாயாவதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், கட்சித் தலைமையின் உத்தரவுக்கு அடிபணியாத என்.மகேஷ், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் இருந்து விலகியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மாயாவதி, என்.மகேஷை கட்சியிலிருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டார். தற்போது சுயேச்சை எம்எல்ஏவாக இருக்கும் என்.மகேஷ், வெகுவிரைவில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ள முன்னேற்பாடுகளில் ஈடுபடுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுகுறித்து மைசூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் என்.மகேஷ் கூறியது: அப்போதைய முதல்வர் குமாரசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடுநிலையாக செயல்படும்படி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியிருந்தார். அதன்படி செயல்பட்ட நான், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருந்துவிட்டேன். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காததை சுட்டிக்காட்டி என்னை கட்சியில் இருந்து வெளியேற்றியது சரியல்ல. சமூக வலைத்தளங்கள் எதிலும் நான் இல்லாததால், இந்த தகவலையும் நான் ஊடகங்கள் வாயிலாகதான் அறிந்துகொண்டேன். பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பி சித்தார்த்தா, எந்த கட்சிக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம் என்று தான் எனக்கு அறிவுறுத்தியிருந்தார். என்னை தகுதி நீக்கம் செய்யக் கோரி பேரவைத் தலைவருக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடிதம் எழுதியிருக்கிறார். இம்மாத இறுதியில் எனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவேன். கொள்ளேகால் தொகுதி மக்களின் நலன் கருதி செயல்படுவேன் என்றார் அவர்.