சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலா 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்கத் திட்டம்: முதல்வர் எடியூரப்பா

சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலா 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை பாஜகவில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.


சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலா 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை பாஜகவில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தின் முன் பாஜகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாமை தொடக்கிவைத்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் கடந்த முறை புதிய உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டபோது பாஜகவில் 80 லட்சம் பேரை சேர்த்தோம். இம்முறை புதிய உறுப்பினர் சேர்க்கையை முடுக்கிவிட்டுள்ளோம். இதுவரை 12 லட்சம் புதிய உறுப்பினர்களை பாஜகவில் சேர்த்துள்ளோம். மேலும் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதற்காக தற்போது முகாம் நடத்தி வருகிறோம். சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலா 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க இருக்கிறோம். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் புதிதாக 100 பேரை உறுப்பினராக சேர்க்கவிருக்கிறோம். இந்தப் பணியில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், தலைவர்கள்,தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உறுப்பினர்களை சேர்க்கவிருக்கிறார்கள்.
பாஜகவின் அமைப்பின் பலத்தைக் கொண்டு மக்களவை, சட்டப்பேரவை, ஊராட்சி, நகராட்சி தேர்தல்களை வெல்ல வேண்டும். அதற்கு தொண்டர்கள் பலம் தேவைப்படுகிறது. அதற்காகவே உறுப்பினர்களை சேர்த்து வருகிறோம். கர்நாடகத்தின் அரசியல் வரலாற்றில் 25 மக்களவைத் தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு பாஜகவின் அமைப்பே காரணமாகும். ஒருபக்கம் கட்சித் தலைவராகவும், மறுபக்கம் மாநிலத்தின் முதல்வராகவும் பணியாற்ற கடவுள் எனக்கு வாய்ப்பளித்துள்ளார். நேரத்தை வீணடிக்காமல் மக்கள் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன்.
பிரதமர் விவசாயிகள் கெளரவ நிதி திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் ரூ.6 ஆயிரத்துடன் மாநில அரசு சார்பில் ரூ.4 ஆயிரம் கூடுதலாக வழங்கப்படும். இதுதவிர, நெசவாளர்கள், மீனவர்கள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, நகர்ப்புற ஏழைகளுக்கு 2 லட்சம் வீடுகளை கட்டவும் திட்டம் வகுத்திருக்கிறோம்.
 மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்றி, எவ்வித பாகுபாடும் இல்லாமல் ஆட்சி நடத்துவேன். மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதே என் நோக்கமாகும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com