முதல்வர் எடியூரப்பாவுடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 2  எம்எல்ஏக்கள் சந்திப்பு

கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களில் 2 பேர் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்துப் பேசினர்.


கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களில் 2 பேர் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்துப் பேசினர்.
மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக செயல்பட்ட 14 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்களை அப்போதைய பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து 17 பேரும் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர். மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்ததால்தன் பாஜக ஆட்சிக்கு வர முடிந்தது. இதற்கு காரணமாக இருந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் குறைந்தது 10 பேருக்கு அமைச்சரவையில் இடமளிக்க முதல்வர் எடியூரப்பா திட்டமிட்டுள்ளார். எனவே, பேரவைத் தலைவரின் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து தொடர்ந்துள்ள வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு காத்திருக்க முதல்வர் எடியூரப்பா முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் அமைச்சரவையை விரிவாக்கும்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்காக 10 இடங்களை காலியாக விட்டுவைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மும்பையில் தஞ்சமடைந்திருந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் மஜத-காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததும் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரான முனிரத்னா, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பெங்களூரில் சனிக்கிழமை முதல்வர் எடியூரப்பாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரான கே.சுதாகர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து கே.சுதாகர் கூறுகையில்,முதல்வராகப் பதவியேற்றதற்காக எடியூரப்பாவை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தேன். மேலும் எனது சிக்பளாப்பூர் தொகுதி வளர்ச்சிக்காகக் கூடுதல் நிதி ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டேன். 
முந்தைய மஜத-காங்கிரஸ் அரசின் செயல்பாடு என்னை மிகவும் காயப்படுத்தியது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து எனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பேன். எனது ஆதரவாளர்களின் எண்ணப்படி நடப்பேன். 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து அப்போதைய பேரவைத் தலைவர்ரமேஷ்குமார் மனிதநேயமற்ற, அறநெறியற்ற, சட்டவிரோதமான செயலை செய்துவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து நாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளோம். உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர். இதனிடையே,  தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரான ரோஷன்பெய்க், முதல்வர் எடியூரப்பாவை சந்தித்துப் பேசினார். கே.சுதாகர், ரோஷன்பெய்க் இருவரும் விரைவில் பாஜகவில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, தகுதி நீக்கம் செய்யப்பட்ட  மற்ற எம்எல்ஏக்களும் பாஜகவில் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com