வெள்ளத்தில் தத்தளிக்கிறது வட கர்நாடகம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மகாராஷ்டிரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், வட கர்நாடகம் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  சாலைகள், வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு


மகாராஷ்டிரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், வட கர்நாடகம் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  சாலைகள், வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடலோர கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருந்ததால்,  தென் கன்னடம்,  உடுப்பி,  குடகு,  வட கன்னடம், ஹாவேரி மாவட்டங்களில் தொடர் மழை பெய்ததால்,  வெள்ளம் பெருக்கெடுத்தது.  அங்கு நிலைமை சீரடைந்துவரும் நிலையில்,  மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.  இதனால் அங்குள்ள அணைகளில் நீர் ததும்புவதால்,  அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாக திறந்துவிடப்படுகிறது.  இது கிருஷ்ணா ஆற்றில் பாய்ந்தோடுகிறது.  அளவுக்கு அதிகமாக மழை பெய்துள்ளதாலும்,  மகாராஷ்டிர மாநிலத்தின் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாலும்,  கிருஷ்ணா ஆறு கரைபுரண்டோடி வருகிறது.  இதன்காரணமாக, பெலகாவி, விஜயபுரா, பாகல்கோட், சிக்கோடி, ராய்ச்சூரு, வட கன்னடம் போன்ற மாவட்டங்களில் சாலைகள், குளங்கள், ஏரிகள் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கின்றன.  தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ளவீடுகளில் மழை நீர்புகுந்துள்ளதால்,  பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.  வெள்ளத்தில் சிக்கியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்க்கப்பட்டு வருகிறார்கள்.  இதனிடையே,  வட கர்நாடகத்தின் உயிர்ப்பாக திகழ்ந்துவரும் கிருஷ்ணா ஆறு தொடர்ந்து கரைபுரண்டு ஓடுவதால், 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது.  இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும்,  மக்கள் நடமாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களைக் காப்பாற்ற மாவட்ட நிர்வாகங்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சுறுசுறுப்பாக வேலை செய்துவருகிறார்கள்.  ஒருசில கிராமங்களில் வீடுகள்,  கோயில்கள், தரைப் பாலங்கள், மேம்பாலங்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன. 
மகாராஷ்டிர மாநிலத்தின் கொய்னா,  வாரணா,  ராஜாபுரா, தூத்கங்கா அணைகளில் இருந்து விநாடிக்கு 4 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால்,  வெள்ள அபாயம் அதிகரித்தவண்ணம் உள்ளது.  வெள்ளத்துக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதால், தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. 
மேலும்,  வட கர்நாடக மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  வெள்ளநீர் புகுந்துள்ளதால்,  விளைபொருள்கள் நாசமடைந்துள்ளன.  கிருஷ்ணா அணைக்கு குறுக்கே அமைந்துள்ள அல்மாட்டி,  நாராயணபுரா அணைகள் நிரம்பியுள்ளதால்,  அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.  அல்மாட்டி அணையின் அதிகபட்ச நீர்மட்டம் 1704.81 அடியாகும்.  சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 1700.58 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,22,113 கன  அடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது.  அணையில் இருந்து விநாடிக்கு 2,39,520 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  அதேபோல, நாராயணபுரா அணையின் அதிகபட்ச நீர்மட்டமான 1615 அடியில் 1610.31 அடி உயரத்துக்கு நீர் உயர்ந்துள்ளது.  சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 2,22,066 கன அடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது.  அணையில் இருந்து விநாடிக்கு 2,27,890 கன அடிதண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  இதனால் அதன் கீழணைப் பகுதிகளில் வெள்ளத்துக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில்,  அடுத்த 3 நாட்களுக்கு மகாராஷ்டிரத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் அடுத்த சில நாட்களில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com