ஆட்சியர்களுடன் முதல்வர் எடியூரப்பா ஆலோசனை

வட கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொலிக்காட்சி

வட கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொலிக்காட்சி முறையில் முதல்வர் எடியூரப்பா ஆய்வு செய்தார். அப்போது, வெள்ள நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
பெங்களூரு  கிருஷ்ணா அரசினர் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற ஆய்வின்போது,  பெலகாவி,  பாகல்கோட்,  விஜயபுரா,  யாதகிரி,  ராய்ச்சூரு மாவட்ட ஆட்சியர்களிடம்  வெள்ள நிலைமை குறித்து எடியூரப்பா கேட்டறிந்தார். இதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
மகாராஷ்டிர மாநிலத்திலும், வட கர்நாடகத்திலும் ஏற்பட்டுள்ள பலத்த மழையின் காரணமாக,  வட கர்நாடகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நிலைமையை கர்நாடக அரசு கூர்ந்து கவனித்துவருகிறது. 
போர்க்கால அடிப்படையில் மீட்பு- நிவாரணப் பணிகளில் ஈடுபடுமாறு தலைமைச் செயலர் வாயிலாக, அனைத்து மாவட்ட பொறுப்பு செயலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா, யாதகிரி, ராய்ச்சூரு மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்புகள் தீவிரமாகக் காணப்படுகிறது. பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் விளைநிலங்களும் பாதிப்புக்குள்ளாகி விளைபொருள்கள் நாசமாகியுள்ளன. வீடுகள், பொதுச் சொத்துகள் சேதம் அடைந்துள்ளன. வெள்ளத்தில் மக்களும், கால்நடைகளும் சிக்கியுள்ளன.
கோகாக் வட்டத்துக்குள்பட்ட அங்கலகி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சிவானந்த சங்கர் நாயக்,  வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது துரதிருஷ்வசமானது.  ஏராளமான பாலகங்கள், தடுப்பணைகள் நீரில் மூழ்கியுள்ளன.
மக்கள், கால்நடைகளின் பாதுகாப்பையும் உறுதிசெய்யுமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான கிராமங்களுக்குச் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், அவை தீவுகளாகியுள்ளன.  அந்தக் கிராமங்களில் இருந்து இருக்கும் மக்களும், கால்நடைகளும் உடனடியாக அப்புறப்படுத்தப்படுவார்கள். உடனடியாக நிவாரணப்பணியாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, போர்வைகள் உள்ளிட்ட அடிப்படை பொருள்களை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  கால்நடைகளுக்கு தீவனம் வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 
தேசிய பேரிடர் மீட்புக் குழு,  மாநில பேரிடர் மீட்புக் குழுவுடன் ராணுவம்,த  துணை ராணுவப் படைகளும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அடுத்த சில நாள்களுக்கு மேலும் கனமழை பெய்யும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது.
பெலகாவி, ராய்ச்சூரு மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொண்டிருந்த மீட்புப் பணிகள் பாராட்டும்படி இருந்தன. இரு மாவட்டங்களிலும் தற்போது தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 3 அணிகள் பணியாற்றி வருகின்றன. 
கிருஷ்ணா ஆற்றில் தண்ணீர் திறப்பு: கிருஷ்ணா ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடுவது குறித்து மகாராஷ்டிர அரசின் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன். மக்களையும் கால்நடைகளையும் மீட்டு, புதுவாழ்வுப்பணிகளை செய்துதருவதே அரசின் தலையாயப் பணியாகும்.  வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நிதி பற்றாக்குறை எதுவும் இல்லை. தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்க அரசு தயாராக உள்ளது என்றார் அவர். 
ஆய்வின்போது தலைமைச் செயலர் டி.எம்.விஜயபாஸ்கர், முதல்வரின் ஆலோசகர் எம்.லட்சுமிநாராயணா, முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலர் பி.ரவிக்குமார்,  செயலர் சிவயோகி சி.கலாசத்,  வருவாய்த் துறை முதன்மைச் செயலர் அனில்குமார்,  தேசிய  பேரிடர் மீட்புக் குழு அதிகாரிகள் உடனிருந்தனர்.

இன்று ஆய்வு செய்கிறார் முதல்வர் எடியூரப்பா
வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை திங்கள்கிழமை ஆய்வு நடத்த முதல்வர் எடியூரப்பா திட்டமிட்டிருக்கிறார்.
வடகர்நாடகத்தில் பெருமழை பெய்துவருவதாலும், மகாராஷ்டிரத்தில் பெய்துவரும்கனமழையால் அங்குள்ள அணைகளில் இருந்துதிறந்துவிடப்படும் தண்ணீராலும் அம்மாநிலத்தையொட்டியுள்ள வடகர்நாடகத்தின் யாதகிரி, ராய்ச்சூரு, பாகல்கோட்,விஜயபுரா, பெலகாவி மாவட்டங்கள் வெள்ளத்தில்
தத்தளித்துக்கொண்டுள்ளன.
இந்த நிலையில்,  மாவட்ட ஆட்சியர்களுடன் ஞாயிற்றுக்கிழமை காணொளிக்காட்சி முறையில் ஆய்வுசெய்த முதல்வர் எடியூரப்பா, பெலகாவி மாவட்டம் நீங்கலாக, யாதகிரி, ராய்ச்சூரு, பாகல்கோட், விஜயபுரா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளபாதிப்புகளை விமானம் வழியாக ஆய்வுசெய்யவிருக்கிறார். 
இதன்படி, திங்கள்கிழமை காலை 9மணிக்கு பெங்களூரில் இருந்துவிமானம் மூலம் புறப்படும் முதல்வர் எடியூரப்பா, பெல்லாரி சென்று, அங்கிருந்து யாதகிரி,ராய்ச்சூரு, பாகல்கோட், விஜயபுரா மாவட்டங்களில் வெள்ளப்பாதிப்புகளை பார்வையிடுகிறார். நண்பகல் 12மணிக்கு அங்கிருந்து விஜயபுரா செல்லும் முதல்வர் எடியூரப்பா, விஜயபுரா, பாகல்கோட் வெள்ளபாதிப்புகள், நிவாரணப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, பிறகு செய்தியாளர்களை சந்தித்து விவரங்களைத் தெரிவிக்கிறார்.  அதன்பிறகு நண்பகல் 1.30மணிக்கு விஜயபுராவில் இருந்து ஹெலிகாப்டரில் பெல்லாரிக்கு வந்து, அங்கிருந்து விமானம் வழியாக மாலை 3.50மணிக்கு பெங்களூரு திரும்புகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியரகங்கள் செய்துவருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com