பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் முதல்வர் எடியூரப்பா

புது தில்லியில்  பிரதமர் நரேந்திர மோடியை  கர்நாடக முதல்வர் எடியூரப்பா செவ்வாய்க்கிழமை (ஆக. 6)  சந்தித்துப் பேசுகிறார்.

புது தில்லியில்  பிரதமர் நரேந்திர மோடியை  கர்நாடக முதல்வர் எடியூரப்பா செவ்வாய்க்கிழமை (ஆக. 6)  சந்தித்துப் பேசுகிறார். மூன்று நாள் பயணமாகச் செல்லும் எடியூரப்பா அமைச்சரவை விரிவாக்கம், கர்நாடகத்துக்கான நலத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கவுள்ளார்.
முதல்வராகப் பதவியேற்றவுடன், முதல் முறையாக புது தில்லிக்குச் செல்லும் எடியூரப்பா,  மோடியை சந்தித்துப் பேசுகிறார்.  இதற்காக திங்கள்கிழமை இரவு 7.40 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் புது தில்லிக்கு புறப்படும் முதல்வர் எடியூரப்பா,  அங்கு கர்நாடக இல்லத்தில் இரவு தங்குகிறார். 
இதையடுத்து,  செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை  சந்திக்கிறார். இதன் பின்னர், பிரதமர் மோடியை எடியூரப்பா சந்தித்து கர்நாடகத்துக்கு வர வேண்டிய திட்ட நிதி ஒதுக்கீடுகள், அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்டவை குறித்துப் பேசவுள்ளார்.
இதன் முடிவில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங்,  நிதின் கட்கரி உள்ளிட்டோரையும் சந்திக்கவிருக்கிறார்.  அப்போது கர்நாடக அரசுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய நிதி ஒதுக்கீடுகள் குறித்து
விவாதிக்கிறார்.
இதன்பின்னர்,  இரவு 7மணிக்கு கர்நாடக இல்லத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள்,  எம்.பி.க்களை எடியூரப்பா சந்தித்துப் பேசுகிறார்.  பின்னர், அவர்களுக்கு விருந்தளிக்கிறார். 
இந்தச் சந்திப்பின்போது கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பது குறித்து விவாதிக்கப்படவிருக்கிறது.  அன்று இரவு கர்நாடக இல்லத்தில் தங்கும் முதல்வர் எடியூரப்பா,  புதன்கிழமை  காலை 10 மணி முதல் மத்திய அமைச்சர்கள் பலரையும் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கவிருக்கிறார்.  அன்று இரவு கர்நாடக இல்லத்தில் தங்குகிறார். 
இதையடுத்து,  வியாழக்கிழமை பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா,  செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்து அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்து விவாதிக்கவுள்ளார்.
 அப்போது அமைச்சரவையில் யாரைச் சேர்ப்பது,   தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிப்பதா?  என்பது பற்றியும் விவாதிக்கப்படுகிறது. அமைச்சரவையை முடிவு செய்த பின்னரே பெங்களூரு திரும்புவதற்கு வசதியாக பயணத் திட்டத்தை முதல்வர் எடியூரப்பா வகுத்துள்ளதாக பாஜக வட்டாரங்கள்
தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com