வட கர்நாடகத்தில் வெள்ள பாதிப்பு: முதல்வர் எடியூரப்பா ஆய்வு

வட கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை திங்கள்கிழமை விமானம் மூலம் சென்று முதல்வர் எடியூரப்பா பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

வட கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை திங்கள்கிழமை விமானம் மூலம் சென்று முதல்வர் எடியூரப்பா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 மகாராஷ்டிரத்தில் பெய்து வரும் பலத்த மழையால் அங்குள்ள கொய்னா உள்ளிட்ட 4 அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வட கர்நாடகத்தின் யாதகிரி, ராய்ச்சூரு, பாகல்கோட்,விஜயபுரா, பெலகாவி மாவட்டங்களில் கிருஷ்ணா, மலபிரபா, கட்டபிரபா, மார்கண்டேயா ஆறுகள் மற்றும் கிளை ஆறுகளுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள அல்மாட்டி, நாராயணபுரா போன்ற அணைகளில் வருகிறது.
 இந்த நிலையில் அணைகள் முழு கொள்ளளவு எட்டியதால் அணைகளில் இருந்து திறந்தவிடப்படும் உபரிநீர் அப்பகுதியில் வெள்ள பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெலகாவி, பாகல்கோட், ராய்ச்சூரு, விஜயபுரா, யாதகிரி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 இம்மாவட்டக்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை விமானத்தில் சென்று முதல்வர் எடியூரப்பா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெலகாவி மாவட்டத்தில் வானம் தெளிவாக இல்லாததால் விமானம் பறக்கமுடியாததால் அம்மாவட்டத்துக்கு முதல்வர் எடியூரப்பா செல்லவில்லை. பெங்களூரில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்ட முதல்வர் எடியூரப்பா, பெல்லாரி சென்று, அங்கிருந்து யாதகிரி, ராய்ச்சூரு, பாகல்கோட், விஜயபுரா மாவட்டங்களில் விமானத்தின் மூலம் பயணித்து வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். வெள்ள பாதிப்புகள், பயிர்நாசம், நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார். இதன்பிறகு மாலை 4 மணிக்கு பெங்களூரு திரும்பினார்.
 முன்னதாக, பெல்லாரியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் முதல்வர் எடியூரப்பா கூறியது: மாறுபட்ட வானிலைகளால் மாநிலம் கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. ஒருபக்கம் மழை இல்லாததால் கடும் வறட்சி, மற்றொருபுறம் அதிகமழையால் வெள்ளம்.
 கிருஷ்ணா ஆற்றுப்படுகை பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் நல்லமழை பெய்திருந்தாலும், மலைநாடு மாவட்டங்களான சிவமொக்கா, பெல்லாரியில் போதுமான மழை இல்லாமல் வறட்சி காணப்படுகிறது. நிகழ்வாரத்தில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நல்லமழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் கிடைக்கும்.
 தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் ராணுவ துணைப் படையினர் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுளனர். இதுவரை யாரும் இறக்கவில்லை. வெள்ளநீரால் கிராமங்கள் மூழ்கும் நிலையிலிருந்தால் அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்ல உத்தரவிட்டுள்ளேன். அல்மாட்டி அணை திறக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து விநாடிக்கு 2.11 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நாராயணபுரா அணையில் இருந்து விநாடிக்கு 2 லட்சம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கிருஷ்ணா ஆற்றின்குறுக்கே உள்ள அணைகளுக்கு அதன் கொள்ளளவை காட்டிலும் கூடுதல் நீர் வந்துள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com