பெங்களூரில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரம்

பெங்களூருவில் வியாழக்கிழமை (ஆக.15) சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி பாதுகாப்பு, கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான அழைப்புகள் குறித்த

பெங்களூருவில் வியாழக்கிழமை (ஆக.15) சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி பாதுகாப்பு, கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான அழைப்புகள் குறித்த ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் கவனித்து வருகிறது.
 இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத், மாநகரக் காவல் அணையர் பாஸ்கர்ராவ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
 பெங்களூரு மகாத்மா காந்தி சாலை அருகேயுள்ள மானக்ஷா அணிவகுப்புத் திடலில் நாட்டின் 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் முதல்வர் எடியூரப்பா, காலை 9 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்து பல்வேறு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.
 அணி வகுப்பில் கேரள காவல் துறை, பள்ளி, கல்லூரி, காவல், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், சாரணர், சாரணியர், சேவைதளம் உள்ளிட்ட 34 அணிகள் கலந்து கொள்கின்றன. இதுதவிர, அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 1250 மாணவர்கள் பங்கேற்று நாட்டுப்பற்றை பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
 இதுதவிர, தரைப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. இந்தவிழாவை காண முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 4 ஆயிரம் பேர் அர்ந்து நிகழ்ச்சியை காணும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 மானக்ஷா அணிவகுப்புத் திடலை சுற்றியுள்ள பகுதிகளைக் கண்காணிக்க 50 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. திடல் பகுதியில் பறக்கும் கேமராக்கள், பலூன்கள், விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. அணிவகுப்புத் திடலை சுற்றி கருடா அதிரடிப் படை வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
 சுதந்திர தின விழாவின்போது எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தடுக்க 2 காவல் இணை ஆணையர்கள், 11 காவல் துணை ஆணையர்கள், 23 காவல் உதவி ஆணையர்கள், 78 காவல் ஆய்வாளர்கள், 175 காவல் துணை ஆய்வாளர்கள், 221 உதவி துணை ஆய்வாளர்கள், 1108 தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள், 77 மகளிர் காவலர்கள் உள்பட 2 ஆயிரம் பேர், கர்நாடக மாநில அதிரடிப்படை வீரர்கள், ஆயுதப்படை வீரர்கள், அதிரடிப்படைக் குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவிருக்கிறார்கள்.
 பெங்களூரில் மக்கள் நடமாட்டம் உள்ள ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், உணவகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத்தலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com