மஜத-காங்கிரஸ் ஆட்சியில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்

கர்நாடகத்தில் முந்தைய மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது முக்கிய அரசியல் தலைவர்களின்

கர்நாடகத்தில் முந்தைய மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது முக்கிய அரசியல் தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக் வலியுறுத்தினார்.
பெங்களூரு குமாரகுருபாவில் உள்ள அரசு இல்லமான கிருஷ்ணாவில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முதல்வராகப் பதவி வகித்த குமாரசாமி, தனது தொலைபேசியை ஒட்டுக் கேட்டதாக, தகுதி நீக்கம் செய்யப்பட்ட மஜத எம்.எல்.ஏ. விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.  இதேபோல, கடந்த 6 மாதங்களாக எனது தொலைபேசியும்,  பாஜக எம்.எல்.ஏ.க்கள், பத்திரிகையாளர்களின் தொலைபேசிகள், செல்லிடப்பேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டன. முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் தொலைபேசி,  செல்லிடப்பேசியும் ஒட்டுக் கேட்கப்பட்டது.  இதனை நான் அப்போதே தெரிவித்தேன்.  அப்போது, எனது குற்றச்சாட்டை யாரும் கண்டு கொள்ளவில்லை.  ஆனால், இப்போது அது உறுதியாகியுள்ளது.  தொலைபேசி,  செல்லிடப்பேசிகளை ஒட்டுக் கேட்பது குற்றச் செயலாகும்.  இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்வர் எடியூரப்பாவைக் கேட்டுக் கொண்டுள்ளோம். 
கூட்டணி அரசு தற்போது ஆட்சியில் இல்லை என்றாலும்,  தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.  முதல்வர் எடியூரப்பா இதுகுறித்து கவனம் செலுத்துவார் என்று நம்புகிறேன் என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் உள் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியது:  தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பது ஒன்றும் புதிய தகவல் இல்லை.  இதனை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து செய்து வருகின்றன என்றார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியது:  காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சியில் அப்போதைய முதல்வர் குமாரசாமியோ, உள்துறை அமைச்சரோ தொலைபேசி, செல்லிடப்பேசிகளை ஒட்டுக் கேட்கவில்லை. குமாரசாமியும் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்க கூறவில்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com