"வெள்ள நிவாரண உதவிகளுக்கு முன்னுரிமை'

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
 கர்நாடக அரசு சார்பில் பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற 73-ஆவது சுதந்திர தின விழாவில் அவர் ஆற்றிய உரை: வறட்சி மற்றும் வெள்ளத்துக்கு இடையே கர்நாடகம் சிக்கிக்கொண்டுள்ளது. இந்த இரு பேரிடர்களால் எதிர்படும் சிக்கல்களை எதிர்கொள்ள எனது அரசு தயார்நிலையில் உள்ளது. நான் முதல்வராக பதவியேற்றதும், மாவட்ட ஆட்சியர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, மாநிலத்தில் நிலவும் வறட்சி நிலைகளை கையாள வழிகாட்டுதல் வழங்கியிருந்தேன். கடந்த 45 ஆண்டுகளில் காணாத பேரிடரை கர்நாடகம் எதிர்கொண்டுள்ளது.
 22 மாவட்டங்களைச் சேர்ந்த 103 வட்டங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. இதனிடையே, மாநிலத்தை சேர்ந்த 5 மாவட்டங்களில் போதுமான மழை பெய்யாததால் வறட்சி காணப்படுகிறது. அண்டை மாநிலத்தின் அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மழைநீர் மற்றும் கர்நாடகத்தில் பெய்த பலத்த மழை இரண்டும் சேர்ந்துகொண்டு கர்நாடகத்தில் வெள்ளச்சூழலை ஏற்படுத்திவிட்டன.
 மழைப்பொழிவு முறையற்றதாக அமைந்துள்ளதும், ஒருசில இடங்களில் அளவுக்கு அதிகமாக பெய்துள்ளதும், சில இடங்களில் குறைந்த மழை பெய்துள்ளதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வெள்ளத்தில் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். 48 மணி நேரத்தில் வெள்ளத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீட்டுத்தொகை அளிக்கப்பட்டது. 6.97 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 859 கால்நடைகள் இறந்துள்ளன. 51,460 கால்நடைகள் மீட்கப்பட்டுள்ளன. 1224 மறுவாழ்வு மையங்களை திறந்து, அங்குள்ள மக்களுக்கு உணவு, உடை, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப்பொருள்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இம்மையங்களில் 3,96,617 மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
 திடீரென ஏற்பட்ட வெள்ளம் ஏற்படுத்திய சவால்கள் ஏராளமானது. இதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது விவசாயிகள்தான். 4.69 லட்சம் ஹெக்டேர் நிலம் மழைநீர் அல்லது நிலச்சரிவில் நாசமடைந்துள்ளன. 58,620 வீடுகள் இடிந்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, சிக்கலில் தவித்துள்ளனர்.
 வெள்ளம் ஏற்பட்டவுடன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, சம்பவ இடங்களுக்கு நேரிடையாக சென்று ஆய்வு மேற்கொண்டேன். பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா, ராய்ச்சூரு, யாதகிரி, தென்கன்னடம், சிவமொக்கா, மைசூரு, கதக் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆய்வு செய்து, உடனடியாக நிவாரண உதவிகளை வழங்க ஏற்படு செய்துள்ளேன். மக்களை மீட்கும் பணியில் அனைவரும் ஈடுபட்டனர்.
 இதில் எதிர்கட்சிகளின் பங்களிப்பையும் பாராட்டுகிறேன். வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக ரூ.10 ஆயிரமும், ரூ.5 லட்சம் இழப்பீடும் வழங்க உத்தரவிட்டுள்ளேன். சேதமடைந்துள்ள வீடுகளை சீர்செய்துகொள்ள ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. நகர்ப்பகுதிகளில் வசிக்கும் குடிசைவாழ் மக்கள் வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இங்கெல்லாம் வீடுகளை கட்டித்தரவும், சாலைகளை சீரமைக்கவும் அரசு முயற்சிக்கும்.
 மத்திய அரசின் உதவி: அண்மையில் புதுதில்லி சென்றிருந்தபோது பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களை சந்தித்து வெள்ள நிவாரண உதவிகளை உடனடியாக விடுவிக்குமாறு கேட்டிருந்தேன். எனது கோரிக்கைக்கு செவிகொடுத்த மத்திய அரசு, உடனடியாக தேசிய பேரிடர்மீட்புக் குழுவினர் தவிர ராணுவ வீரர்களையும் அனுப்பிவைத்தது. மேலும் ஹெலிகாப்டர்கள், மீட்புப் படகுகளையும் அனுப்பி மக்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்துவதில் மத்திய அரசு பங்காற்றியது. மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலாசீத்தாராமன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய ரசாயனத் துறை அமைச்சர் சதானந்த கெளடா, மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரஹலாத்ஜோஷி, மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் சுரேஷ் அங்கடி உள்ளிட்ட எம்பிக்கள் வெள்ள பகுதிகளைப் பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்குவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 வெள்ளத்தில் பலரும் வீடுகளை இழந்துள்ளனர். புதிதாக வீடு கட்டுவதற்கு அரசு உதவும். வெள்ளத்தால் ஏற்பட்ட பொருள் சேதங்களை மதிப்பிடும் பணி நடைபெற்றுவருகிறது. இப்பணி முடிவடைந்ததும், வெள்ளம் மற்றும் மழையால் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்பது தெரியவரும். அதன்பிறகு, மத்திய அரசிடம் நிதி உதவி கோரப்படும். நிவாரணப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com