தேவெ கெளடா குற்றச்சாட்டில் உண்மையில்லை

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்ததற்கு நான்தான் (சித்தராமையா) காரணம் என முன்னாள் பிரதமர் தேவெ கெளடா கூறுவது ஆதாரமற்ற,  அரசியல் லாபத்துக்கான குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்ததற்கு நான்தான் (சித்தராமையா) காரணம் என முன்னாள் பிரதமர் தேவெ கெளடா கூறுவது ஆதாரமற்ற,  அரசியல் லாபத்துக்கான குற்றச்சாட்டு என்றார் முன்னாள் முதல்வர் சித்தராமையா.


இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா என்மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். அதில் எள்ளளவும் உண்மையில்லை.

பாஜக ஆட்சியில் ஜனநாயகத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.   மதவாத சக்திகளை எதிர்கொள்வதற்கு மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டும். 

வருமான வரித் துறை,  அமலாக்கத் துறை, சிபிஐ, ரிசர்வ் வங்கி,  தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்புச் சட்ட நிறுவனங்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது.  எனவே, மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வேண்டும்.

இந்த சூழ்நிலையில் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா என் மீது பொய்யான, ஆதாரமற்ற, அரசியல் தீயநோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறார்.  குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்வதற்கு நான்தான் காரணம்;  குமாரசாமி முதல்வராக இருப்பதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை;  குமாரசாமியை முதல்வராக்க கட்சி மேலிடம் முடிவு செய்ததை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை;  எடியூரப்பா முதல்வரானால், நான் எதிர்க்கட்சித் தலைவராகலாம் என்று சதி செய்தேன் என்று எச்.டி.தேவெ கெளடா கூறியுள்ளார்.

பாஜகவை ஆட்சி அமைக்கவிடாமல் தடுப்பதே என் நோக்கமாக இருந்தது. குமாரசாமி முதல்வராக ஆதரவளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தபோது, அந்த முடிவை தலைவணங்கி ஏற்றுக் கொண்டேன். 14 மாதங்கள் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன்.  ஆட்சி நிர்வாகத்தில் நான் தலையிட்டதே கிடையாது. 

கூட்டணி அரசு கவிழ்வதற்கு எச்.டி.தேவெ கெளடா, எச்.டி.குமாரசாமி, எச்.டி.ரேவண்ணா ஆகியோர் காரணம் என்று எம்எல்ஏக்கள்,  அப்போதைய அமைச்சர்கள் தெரிவித்தனர், நான் கூறவில்லை.  தொகுதி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் எம்எல்ஏக்கள் அதிருப்தியானார்களின் தன்னிச்சையான முடிவு,  அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ளாததுதான் ஆட்சி கவிழ முக்கிய காரணம். 

அரசியல் ஆதாயத்துக்காக எச்.டி.தேவெ கெளடா என்மீது பழிசுமத்துகிறார். காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவரான என்னை ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமித்தனர்.  ஒருங்கிணைப்புக் குழுவில் எடுத்த முடிவுகளை குமாரசாமி நிறைவேற்றவில்லை.  கூட்டணி அரசைக் காப்பாற்ற கடைசிவரை தீவிரமாக முயற்சித்தோம். பாஜக ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதால் தீவிரமாக முயற்சித்தோம். 

எடியூரப்பா முதல்வரானால் எதிர்க்கட்சித் தலைவராகிவிடலாம் என்று நான் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டதாக எச்.டி.தேவெகெளடா கூறியிருக்கிறார். முதல்வராக ஆட்சியைக் கவிழ்க்கலாம், எதிர்க்கட்சித் தலைவராக ஆட்சியைக் கவிழ்ப்பார்களா? பதவியைத் தேடி அலைந்தவன் நான் அல்ல. பதவிக்காக ஆட்சியைக் கவிழ்க்கும் மலிவான அரசியலில் ஈடுபடுபவன் நான் அல்ல.

ராமகிருஷ்ண ஹெக்டே, எஸ்.ஆர்.பொம்மை, தரம்சிங் ஆகியோரின் ஆட்சியைக் கவிழ்த்தது தேவெ கெளடாதானே. 

கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு எச்.டி.தேவெ கெளடாதான் காரணம்.  20 மாதங்கள் எடியூரப்பாவை முதல்வராக்கியிருந்தால், கர்நாடகத்தில் பாஜக வளர்ந்திருக்காது. மக்களவைத் தேர்தலில் மஜதவும், காங்கிரஸூம் தோழமையாக மோதலாம் என்று கூறியிருந்தேன்.  தேவெ கெளடா யாரையும் வளரவிட மாட்டார். 

கூட்டணி அரசு கவிழ்வதற்கு நான் காரணம் என்று எச்.டி.தேவெ கெளடா கூறியுள்ள குற்றச்சாட்டில் உண்மையில்லை.  எனது அரசியல் வாழ்க்கையை முடிப்பதற்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறார். மஜதவுடனான காங்கிரஸ் கூட்டணி தொடருமா? என்பதை கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும். எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என்று கூற முடியாது.  ஆனால், அரசு நீண்ட நாள்களுக்கு நீடிப்பது கடினம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com