ஏழைகள், விவசாயிகள் மீது பிரதமருக்கு அக்கறை இல்லை: சித்தராமையா 

ஏழைகள், விவசாயிகள் மீது பிரதமருக்கு அக்கறை இல்லை என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
ஏழைகள், விவசாயிகள் மீது பிரதமருக்கு அக்கறை இல்லை: சித்தராமையா 

ஏழைகள், விவசாயிகள் மீது பிரதமருக்கு அக்கறை இல்லை என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

பெங்களூரு ஆனந்தராவ் சதுக்கம் காந்திசிலை அருகே வியாழக்கிழமை மாநில அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தர்னா போராட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது: குதிரை வியாபாரத்தின் மூலம் பின்கதவு வழியாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. அவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. இதனால் மக்கள் மீது எடியூரப்பாவுக்கு அக்கறை இல்லை.

வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் எடியூரப்பா தலைமையிலான மாநில அரசு முழுமையாக தோல்வி அடைந்துள்ளது. வெள்ள நிவாரணத்துக்கு தேவையான நிதியை வழங்குவதில் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது. பிரதமர் மோடிக்கு ஏழைகள், விவசாயிகள் மீது அக்கறை இல்லை. கர்நாடகம் வெள்ளத்தால் தத்தளித்து வரும் நிலையில், பிரதமர் ஆறுதல் வார்த்தை கூறாமல், வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மாநிலத்தில் 1914 ஆம் ஆண்டு இதுபோன்று வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இப்போதுதான் அதிகளவு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 1 லட்சம் குடும்பத்தினர் வீடுகளை இழந்து வீதிக்கு வந்துள்ளனர் என்றார்.

"வெள்ள நிவாரணப் பணிகளில் பாஜக அரசு தோல்வி'

கர்நாடகத்தில் வெள்ள நிவாரணப் பணிகளில் பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளதாக அந்த மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

பெங்களூரு ஆனந்தராவ் சதுக்கத்தில் மகாத்மா காந்தி சிலை முன் வியாழக்கிழமை மாநில அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தர்னாவில் ஈடுபட்டனர். இதில் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர்கண்டரே, முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி, முன்னாள் அமைச்சர்கள் ராமலிங்க ரெட்டி, டி.கே.சிவகுமார், எச்.கே.பாட்டீல், ஆர்.வி.தேஷ்பாண்டே, ஜமீர் அகமதுகான், ரமாநாத்ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தர்னாவில் தினேஷ் குண்டுராவ் பேசியது: மழை வெள்ளத்தால் வடகர்நாடகம், குடகு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் ஆளும் பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளது. நிவாரண நிதி கோர முதல்வர் எடியூரப்பா தில்லி சென்றார்.ஆனாலும், மத்திய அரசு நிவாரண நிதி வழங்காமல் காலம் கடத்தி வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. என்றாலும், கர்நாடகத்தின் நலனில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com