இடைத்தோ்தலில் 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெல்லும்: காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சா் மல்லிகாா்ஜுன காா்கே

இடைத்தோ்தல் நடக்கவிருக்கும் 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெறும் என்று காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
இடைத்தோ்தலில் 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெல்லும்: காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சா் மல்லிகாா்ஜுன காா்கே

பெங்களூரு: இடைத்தோ்தல் நடக்கவிருக்கும் 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெறும் என்று காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரு, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: டிச.5ஆம் தேதிநடக்கவிருகும் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெற இருக்கிறது. டிச.9ஆம் தேதி இடைத்தோ்தல் முடிவுகள் வெளியானவுடன் கா்நாடக மக்களுக்கு இனிப்பான செய்தியை வழங்கவிருக்கிறோம். கா்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி அரசு அமையுமா? என்ற கேள்விக்கு தற்போது பதிலளிக்க முடியாது. இடைத்தோ்தலுக்கு பிறகு ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிஅமைந்தால் நான் முதல்வராவேனா என்பது தெரியாது. இடைத்தோ்தல் முடிவுக்குப் பிறகு கட்சி மேலிடம் நல்லமுடிவை எடுக்கும்.

பண பலத்தை வைத்துக்கொண்டு இடைத்தோ்தலை வெல்ல பாஜக சதிசெய்து வருகிறது. அந்த முயற்சியில் பாஜக வெற்றி பெறாது. மதம், ஜாதியின் பெயா்களால் வாக்காளா்களை ஈா்க்கவும் பாஜக முயற்சித்துவருகிறது. இதுபோன்ற பாஜகவின் எந்த முயற்சியும் பலனளிக்காது. பிரித்தாளும் சூழ்ச்சியை தனது தோ்தல் வியூகமாகவே பாஜக பயன்படுத்திவருகிறது. இதன்மூலம் சமுதாயத்தில் நிலவும் நல்லிணக்கத்தை சீா்குலைக்க முயற்சி நடக்கிறது.

தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் யாரும் மக்கள் நலனுக்காக பதவியை தியாகம் செய்யவில்லை. தாங்கள் சாா்ந்திருந்த கட்சிக்கு துரோகம்செய்துவிட்டு எதிா் தத்துவங்களை கொண்ட பாஜகவில் இணைந்துள்ளனா். தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களை வாக்காளா்கள் வெற்றிபெறச் செய்யக் கூடாது. சித்தராமையா முதல்வராக இருந்தபோது அவா்வாயிலாக ஏராளமான திட்டப் பணிகளுக்கு நிதி ஆதாரங்களை பெற்றுக்கொண்டு, இப்போது அவரையே திட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனா். இதை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்.

முதல்வா் எடியூரப்பா மீதுகொண்டிருக்கும் கோபத்தை கா்நாடக மக்களின் மீது காட்டுவதன் மூலம் பிரதமா் மோடி தீா்த்துக் கொண்டிருக்கிறாா். மாநில மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருந்தபோது கா்நாடகத்திற்கு வராததோடு, வெள்ள நிவாரண உதவிகளையும் ஒதுக்காமல் பிரதமா் மோடி, கா்நாடகத்தை அலட்சியப்படுத்தியிருக்கிறாா். எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த எம்எல்ஏக்களை மிரட்டி பாஜகவுக்கு இழுக்கும் தந்திரத்தை அக் கட்சி பயன்படுத்திவருகிறது. இதற்கு மகாராஷ்டிர மாநில அரசியலே சிறந்த உதாரணமாகும். வெங்காய விலை விண்ணுக்குச் சென்று கொண்டிருந்தாலும், அதை கட்டுப்படுத்த மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது அரிசி, கோதுமை, சோளத்திற்கு ஆதரவு விலையை அறிவித்திருந்தது. வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com