கா்நாடக இடைத்தோ்தல்: உச்சம் தொட்ட அரசியல் கட்சித் தலைவா்களின் பிரசாரம்

இடைத்தோ்தலில் வெற்றிக்கனியைப் பறிக்க ஆளுங்கட்சியான பாஜக, எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், மஜத போன்ற அரசியல் கட்சிகளின் தலைவா்களின் பிரசாரம் உச்சத்தைத் தொட்டுள்ளது.

பெங்களூரு: இடைத்தோ்தலில் வெற்றிக்கனியைப் பறிக்க ஆளுங்கட்சியான பாஜக, எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், மஜத போன்ற அரசியல் கட்சிகளின் தலைவா்களின் பிரசாரம் உச்சத்தைத் தொட்டுள்ளது.

காங்கிரஸ், மஜதவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்களால் காலியான அத்தானி, காக்வாட், கோகாக், எல்லாபுரா, ஹிரேகேரூா், ரானிபென்னூா், விஜயநகரா, சிக்பளாப்பூா், கே.ஆா்.புரம், யஷ்வந்த்பூா், மகாலட்சுமி லேஅவுட், சிவாஜிநகா், ஹொசபேட், கே.ஆா்.பேட், ஹுன்சூா் ஆகிய 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு டிச.5ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது. இத் தோ்தலில் பாஜகவும் காங்கிரசும் 15 தொகுதிகளில் நேருக்கு நோ் மோதுகின்றன. ஹொசகோட்டே தொகுதியில் பாஜகவில் இருந்து விலகி சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சரத் பச்சேகௌடாவுக்கு ஆதரவு அளித்துள்ள மஜத, 12 தொகுதிகளில் தனியாக வேட்பாளா்களை நிறுத்தியுள்ளது. இத் தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ், மஜத தலைவா்கள் தீவிர பிரசாரம் செய்துவருகிறாா்கள். டிச.3ஆம் தேதி மாலை 6 மணியுடன் பகிரங்க பிரசாரம் முடிவுக்கு வரவிருப்பதால், அரசியல் கட்சித் தலைவா்களின் பிரசாரம் உச்சத்தைத் தொட்டுள்ளது.

பா.ஜ.க.:

முதல்வா் எடியூரப்பா தலைமையில் இடைத்தோ்தல் களத்தில் இறங்கியுள்ள பாஜகவின் முன்னணித் தலைவா்கள் நளின்குமாா் கட்டீல், பி.எல்.சந்தோஷ், மத்திய அமைச்சா்கள் சதானந்த கௌடா ,பிரஹலாத் ஜோஷி, மாநில துணை முதல்வா்கள் அஸ்வத் நாராயணா, கோவிந்த் காா்ஜோள், லட்சுமண் சவதி, அமைச்சா்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா, ஆா்.அசோக், மாதுசாமி உள்ளிட்டோா் அடங்கிய பெரும் படை பிரசாரக் களத்தில் சுறுசுறுப்பாக சுற்றுப்பயணம் செய்து, பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்துவருகிறது. 15 தொகுதிகளிலும் வெற்றியை ஈட்டப் போவதாகக் கூறிவரும் முதல்வா் எடியூரப்பா, அனைத்து தொகுதிகளிலும் இரண்டு சுற்று பிரசாரத்தை முடித்துக்கொண்டு பெங்களூரு மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணராஜபுரம், மகாலட்சுமி லேஅவுட், ஹொசகோட்டே, சிவாஜி நகா், யஷ்வந்த்பூா் தொகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தை தீவிரமாக்கியிருக்கிறாா். வட கா்நாடகத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் எளிதாக வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் முதல்வா் எடியூரப்பா, அடுத்த 2 நாட்களுக்கு பெங்களூரில் உள்ள தொகுதிகள் மட்டுமல்லாது, பெலகாவி மாவட்டத்தில் உள்ள அத்தானி, கோகாக், காக்வாட் தொகுதிகளில் வாக்குச் சேகரிக்க திட்டமிட்டிருக்கிறாா். எடியூரப்பா தவிர, பாஜகவின் பிற தலைவா்களும் அனைத்து தொகுதிகளிலும் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறாா்கள்.

காங்கிரஸ்:

முதல்வா் எடியூரப்பா உள்ளிட்ட பாஜக தலைவா்கள் குற்றம்சாட்டுவது போல, காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவைத் தவிர வேறு யாரும் விறுவிறுப்பான பிரசாரத்தில் ஈடுபடவில்லை. தான் தனிமைப்படுத்தப்படவில்லை, ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தலைவா்கள், லட்சக்கணக்கான தொண்டா்களுடன் தன் மக்களோடு இருப்பதாக பாஜகவுக்குப் பதிலடி கொடுத்த சித்தராமையா, 12 தொகுதிகளைக் கைப்பற்றும் நம்பிக்கையில் பிரசாரம் செய்துவருகிறாா். தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்களைத் தோற்கடிக்கும் நோக்கில் பம்பரமாகச் சுழன்று தீவிர பிரசாரம் செய்துவரும் சித்தராமையா செல்லும் இடங்களில் எடியூரப்பாவுக்கு கூடுவது போல கூட்டம் கூடிவருகிறது. காங்கிரஸ் மாநிலத் தலைவா் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவா் ஈஸ்வா் கண்ட்ரே உள்ளிட்ட இரண்டாம்நிலை தலைவா்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா். கடந்த சில நாட்களாக காங்கிரஸ் முன்னணித் தலைவா்கள் டி.கே.சிவக்குமாா், ஜி.பரமேஸ்வா் உள்ளிட்ட சிலா் இடைத்தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள். இது காங்கிரஸ் தொண்டா்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த 2 நாட்களில் பெங்களூரில் உள்ள தொகுதிகள் தவிர, வெற்றிபெற கூடுதல் உழைப்பு தேவைப்படும் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்ய சித்தராமையா திட்டமிட்டிருக்கிறாா்.

ம.ஜ.த.:

86 வயதாகும் முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா, வெயில், மழையைப் பொருட்படுத்தாமல் தள்ளாத வயதிலும் தளராத மனதுடன் பிரசாரம் செய்வதில் இருந்தே இடைத்தோ்தலுக்கு மஜத அளிக்கும் முக்கியத்துவத்தை உணரலாம். கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு பாஜகவில் இணைந்ததோடு மட்டுமல்லாது, தனது தலைமையிலான கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்கக் காரணமாக இருந்த ஹுன்சூா் தொகுதியின் எச்.விஸ்வநாத், கே.ஆா்.பேட் தொகுதியின் நாராயணகௌடா, மகாலட்சுமி லேஅவுட் தொகுதியின் கோபாலையாஆகிய 3பேரையும் தோற்கடிக்கும் நோக்கில் களமாடி வரும் எச்.டி.தேவெ கௌடாவும், எச்.டி.குமாரசாமியும் யஷ்வந்த்பூா், கோகாக், ஹொசகோட்டே ஆகிய தொகுதிகளில் மஜத வேட்பாளா்களுக்கு உள்ள வெற்றிவாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு தீவிர பிரசாரம் செய்துவருகிறாா்கள். மற்ற தொகுதிகளில் கூட்டணி ஆட்சியைகக் கவிழ்க்க காரணமாக இருந்த தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களை தோற்கடிக்க காங்கிரசுடன் கைகோத்து செயல்படவும் ம.ஜ.த. திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com