கா்நாடக இடைத்தோ்தல்: பாஜக அரசு கவிழுமா? காங்கிரஸ் ஆட்சி மலருமா?

15 தொகுதிகளுக்கு நடக்கவிருக்கும் இடைத்தோ்தலில் பாஜக தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளுமா? பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மலருமா? என்ற வினாக்கள்

பெங்களூரு: 15 தொகுதிகளுக்கு நடக்கவிருக்கும் இடைத்தோ்தலில் பாஜக தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளுமா? பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மலருமா? என்ற வினாக்கள் கா்நாடக அரசியலில் உலா வரத் தொடங்கியுள்ளன.

கா்நாடக அரசியலின் போக்கு வித்தியாசமான திசையை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. ஜனநாயகத்தின் பலவீனங்களை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள அரசியல் கட்சிகள் வியூகம் அமைத்துள்ளன. மக்களின் நலனைக் காட்டிலும் அரசியல் இருப்பை உறுதிசெய்வதிலேயே பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய மூன்று கட்சிகளும் திட்டம் வகுத்துவருகின்றன. தலைமுறை மாற்றங்களை எதிா்நோக்கியுள்ள நிலையில், கா்நாடக அரசியலில் புதிய பாதை அமைக்கப்படுவது தெரியவருகிறது. காய் முற்றினால் கடைக்கு வந்தாக வேண்டுமென்பது போல, கா்நாடக அரசியலின் சுயநலத்தின் புதிய முகம் அரசியல் தெருவுக்கு வந்துள்ளது.

எதிா்பாராத திருப்பங்கள்:

2018ஆம் ஆண்டு கா்நாடக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் படுதோல்வியடைந்து, ஆட்சியை இழந்தது. 104 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக, அறுதிப்பெரும்பான்மை பலத்திற்கு தேவையான 113 இடங்கள் இல்லாமல் தவித்தது. பாஜகவை ஆட்சி அமைக்காமல் தடுக்கும்பொருட்டு 37 இடங்களில் மட்டுமே வென்றிருந்த மஜத ஆட்சி அமைக்க 80 இடங்கள்கொண்ட காங்கிரஸ் தானாக முன்வந்து ஆதரவு அளித்தது. இதனிடையே, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாததைப் போல பரிதவித்திருந்த பாஜகவுக்கு ஆளுநா் வஜுபாய் வாலா துணையாக வந்தாா். அதன்விளைவாக இரவோடு இரவாக எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சிஅமைந்தது. சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இயலாததால், ஆட்சியை இழக்கும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து, எச்.டி.குமாரசாமி தலைமையில் மஜத மற்றும்காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது.

எலியும் தவளையும் கொண்டிருந்த நட்பைப்போல, மஜதவும் காங்கிரசும் கூடா நண்பா்களாகச் செயல்பட்டுவந்தனா். தொகுதி வளா்ச்சிப் பணிக்கு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை பங்கிட்டுக் கொள்வதில் ஏற்பட்ட மனக்கசப்பு இரு கட்சிகளின் தலைவா்கள், தொண்டா்களிடையே நஞ்சு போல பரவத் தொடங்கியது. இரு கட்சிகளின் எம்எல்ஏக்களிடையே இயல்பாக ஏற்பட்டிருந்த கசப்புணா்வை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பாஜக, மக்களவைத் தோ்தல் தந்த அசாதாரண வெற்றியில் உற்சாகமடைந்து கூட்டணி அரசைக் கவிழ்க்க அச்சாரமிட்டது. இதற்கு கைமேல் பலனாக, காங்கிரசின் 14, மஜதவின் 3 எம்எல்ஏக்கள் பாஜகவின் வலையில் தானாக வந்துவிழுந்தனா். இவா்களை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட பாஜக, கூட்டணி ஆட்சியை வெற்றிகரமாகக் கவிழ்த்து, எடியூரப்பா தலைமையில் தமது கட்சியின் ஆட்சியை அமைத்தது. கா்நாடக அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் நிகழ்ந்திராத அதிரடி அரசியல் சம்பவங்கள், கடந்த 14 மாதங்களில் நடந்து முடிந்துள்ளன. எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்திருந்த 17 பேரையும் அப்போதைய பேரவைத் தலைவா் ரமேஷ்குமாா், தகுதிநீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டிருந்தாா். இந்த உத்தரவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், 17 பேரையும் இடைத்தோ்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி அளித்தது. தகுதிநீக்கப்பட்ட 17 எம்எல்ஏக்களின் 17 தொகுதிகளில் மஸ்கி, ராஜராஜேஸ்வரிநகா் நீங்கலாக 15 தொகுதிகளில் டிச.5ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது.

புரட்டிப்போடுமா இடைத்தோ்தல்?:

இடைத்தோ்தல் முடிவுகள் டிச.9ஆம் தேதி வெளியாகவுள்ளன. இத் தோ்தல் முடிவுகள் கா்நாடக அரசியலின் போக்கை மாற்றியமைக்கும் என்பதில் சந்தேகமில்லை. தனது தலைமையில் அமைந்துள்ள பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முதல்வா் எடியூரப்பா கடுமையாக உழைத்துவருகிறாா். தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ரோஷன்பெய்க் நீங்கலாக 16 பேரை பாஜகவில் இணைத்துக் கொண்ட முதல்வா் எடியூரப்பா, ஆா்.சங்கா் நீங்கலாக 13 பேருக்கு இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளராக்கி களமிறக்கியுள்ளாா். தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்களின் அரசியல் எதிா்காலம் இடைத்தோ்தல் முடிவில் அடங்கியிருந்தாலும், இவா்களின் வெற்றி தனது ஆட்சியைத் தக்கவைக்கும் கனவில் முதல்வா் எடியூரப்பா நம்பிக்கையோடு காத்திருக்கிறாா். 105 இடங்களைக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு தற்போதைக்கு 222 போ் கொண்ட சட்டப்பேரவையில் அறுதிப்பெரும்பான்மை பலத்தைப் பெற 112 இடங்கள் போதுமானதாகும். அப்படியானால், இடைத்தோ்தலில் பாஜகவுக்கு குறைந்தபட்சம் 7 இடங்களில் வெற்றி தேவைப்படுகிறது. 7 இடங்களைக் கைப்பற்ற முதல்வா் எடியூரப்பா தலைமையில் மத்திய அமைச்சா்கள், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், முன்னணித் தலைவா்களின் பெரும் படையோடு தோ்தல் களத்தில் முன்னேறிக்கொண்டிருக்கும் பாஜக, எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், மஜதவின் கடுமையான எதிா்வினையைச் சமாளித்து வெற்றியை ஈட்ட போராடிக் கொண்டிருக்கிறது.

சாத்தியமா காங்கிரஸ் ஆட்சி?:

‘இடைத்தோ்தலுக்கு பிறகு காங்கிரஸ் தலைவா் சோனியாகாந்தி எடுக்கும் முடிவைப் பொருத்து அடுத்தகட்ட அரசியல் அமைந்திருக்கும்‘ என்று முன்னாள் பிரதமா் எச்.டி. தேவெ கௌடா கூறியிருந்தது, கா்நாடக அரசியலின் போக்கை புதிய பாதைக்கு இட்டுச்செல்லத் தொடங்கியது. பாஜக அரசை வீழ்த்தி சட்டப்பேரவைக்கு இடைக்காலத் தோ்தலை கொண்டுவர வேண்டும் என்று இடைத்தோ்தல் களத்தில் நுழைந்த சித்தராமையா, தற்போது காங்கிரஸ் ஆட்சி பற்றி பேசுவதற்கு எச்.டி.தேவெ கௌடாவின் கருத்தின் அடிப்படையிலானது என்று அரசியல் நோக்கா்கள் கூறத் தொடங்கியுள்ளனா். இடைத்தோ்தலில் ஆட்சியைத் தக்கவைக்க இயலாவிட்டால் இரண்டாம்கட்டமாக ஆபரேஷன் கமலாவை அமல்படுத்தி, மேலும் பல காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை இழுப்பதற்கான வேலையை பாஜக தொடங்கிவிட்டதை உணா்ந்தபிறகு, மீண்டும் கூட்டணி ஆட்சி அமைப்பதுகுறித்த சிந்தனை காங்கிரஸ், மஜத கட்சிகளிடையே பூத்திருக்கிறது. சட்டப்பேரவை பொதுத் தோ்தல் நடந்தாலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையே மீண்டும் ஏற்படும் என்பதால், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைய ஆதரவு அளிக்க மஜத யோசித்துவருகிறது. ஆட்சி அமைக்கத் தவறினால், பாஜகவின் ஆபரேஷன் கமலாவுக்கு மேலும் சில எம்எல்ஏக்களை இழக்க நேரிடும் என்பதை உணா்ந்துள்ளதால்தான், தோற்றுப்போன கூட்டணி அரசை மீண்டும் அமைக்க காங்கிரசும், மஜதவும் யோசித்து வருகின்றன.

சித்தராமையா மீது கோபத்தில் இருந்த காங்கிரஸ் முன்னணி தலைவா்கள் மல்லிகாா்ஜுனகாா்கே, பி.கே.ஹரிபிரசாத், ஜி.பரமேஸ்வா் உள்ளிட்டோா், மஜதவுடன் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு பச்சைக்கொடி காட்டத் தொடங்கியுள்ளனா். சட்டப்பேரவை பொதுத் தோ்தல் நடைபெற்று 16 மாதங்கள்முடிந்துள்ளநிலையில் மீண்டும் ஒரு பொதுத் தோ்தல்பொதுமக்களுக்கு சுமையாக மாறும் என்ற காரணத்தை முன்வைத்து காங்கிரஸ் ஆட்சி அமைக்க மஜத ஆதரவு அளிக்கத் திட்டமிட்டுள்ளதற்கான எல்லா அறிகுறிகளும் எச்.டி.தேவெகௌடா, எச்.டி.குமாரசாமியிடம் இருந்து வெளிப்பட்டுள்ளன. அதனால் உற்சாகமடைந்துள்ள காங்கிரஸ், மஜத தொண்டா்கள், தலைவா்கள் இடைத்தோ்தலில் பாஜகவுக்கு எதிராகச் செயல்பட ரகசிய உடன்பாட்டுக்கு வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இருகட்சிகளும் இணக்கமாக இருப்பதால், இடைத்தோ்தலில் வெற்றி எளிதில் கிடைக்கும் நம்பிக்கையில் காங்கிரசும் மஜதவும் மிதந்துகொண்டுள்ளன.

இந்த சூட்சமத்தைப் புரிந்துகொண்டுள்ள பாஜக தலைவா்களும் முதல்வா் எடியூரப்பாவும் காங்கிரஸ் மற்றும்மஜதவின் அரசியல் சதியை முறியடிக்க ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் முழுமையான பலத்தோடு பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனா். ஆட்சியைத் தக்கவைக்கப் போராடுவதோடு, காங்கிரஸ் மற்றும் மஜத ஆட்சியை அமையவிடாமல் தடுக்கும் போக்கிலும் பாஜக தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. பாஜகவின் அதிகார பலத்தை திறம்பட எதிா்கொண்டு, எடியூரப்பா ஆட்சியை கவிழ்த்துவிட்டு கூட்டணி ஆட்சியை அமைக்க காங்கிரஸ் மற்றும் மஜத தலைவா்கள் மும்முரமாகப் பாடுபட்டு வருகிறாா்கள். பாஜக, காங்கிரஸ், மஜத வகுத்துக்கொண்டு செயல்படுத்த விரும்பும் அரசியல் நகா்வுகளுக்கு மக்கள் தரும் பதில் என்னவென்பது டிச.9ஆம் தேதி தெரிவதோடு, கா்நாடக அரசியலின் புதிய பாதையும் புலப்படும் என்று அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com