அடிப்படை வசதியின்றி காட்டுச்சேரி ஊராட்சி: பொதுமக்கள் அவதி

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காட்டுச்சேரி ஊராட்சியில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால், அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர். 
 அடிப்படை வசதியின்றி காட்டுச்சேரி ஊராட்சி: பொதுமக்கள் அவதி


நாகை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காட்டுச்சேரி ஊராட்சியில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால், அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர். 
காட்டுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட காளியம்மன் கோயில் தெருவில் 100}க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் குடிநீர், சாலை வசதிகள் ஊராட்சி நிர்வாகத்தால் சில ஆண்டுகளுக்கு முன்பு செய்து தரப்பட்டன. எனினும், முறையாக பராமரிக்கப்படாததால், குடிநீர்த் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் அவ்வப்போது குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
 ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீர், மாசுபடர்ந்து சுகாதாரமற்ற முறையில் இருப்பதால், நாள் முழுவதும் அந்தக் குடிநீரை தெளிய வைத்து பயன்படுத்தும் அவல நிலைக்கு இப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் தெருக்களில் முறையான வடிகால் வசதி செய்யப்படவில்லை. இதனால், குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, மர்மக் காய்ச்சல் பரவி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
 இப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் 50}க்கும் மேற்பட்ட கான்கிரீட் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. தற்போது அந்த வீடுகள் அனைத்தும் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் தருவாயில் உள்ளன. தற்போது பெய்து வரும் கனமழையால், அவ்வீடுகளில் வசிப்பவர்கள் அச்சத்துடனேயே ஒவ்வொரு நாளையும் கடத்துகின்றனர். 
இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த என். செல்வம் கூறியதாவது :
 தமிழக அரசால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட கான்கிரீட் தொகுப்பு வீடுகள் தற்போது விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளன. தற்போது பெய்து வரும் கனமழையால், உயிருக்கு அஞ்சியே அந்தத் தொகுப்பு வீட்டில் வசிக்கிறோம்.  இங்குள்ள குடிநீர்த் தொட்டி கடந்த 3 ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனை சீர் செய்ய வலியுறுத்தி பலமுறை ஊராட்சியில் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எங்கள் கிராமத்தில் சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக இருப்பதால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தியாகி பல்வேறு நோய்களுக்கு வித்திடுகின்றன. எனவே, எங்கள் நிலைமையைக் கருத்தில் கொண்டு குடிநீர், சாலைகள் மற்றும் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் 
என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com