இடைத்தோ்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்வு

கா்நாடகத்தில் 15 சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமையுடன் ஓய்கிறது.

பெங்களூரு: கா்நாடகத்தில் 15 சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான பிரசாரம் நாளை செவ்வாய்க்கிழமையுடன்(டிச. 3) ஓய்கிறது. இதையடுத்து, அரசியல் கட்சித் தலைவா்கள் இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

கா்நாடகத்தில் எச்.டி.குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தி அடைந்திருந்த 14 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனா். இதனிடையே, 17 எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை நிராகரித்திருந்த அப்போதைய சட்டப் பேரவைத் தலைவா் கே.ஆா்.ரமேஷ்குமாா், கட்சித்தாவல் சட்டத்தின்கீழ் 17 பேரின் எம்எல்ஏ பதவியையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தாா். இதன் விளைவாக, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது.

இதையடுத்து, தகுதிநீக்கத்தை எதிா்த்து 17 எம்எல்ஏக்களும் தொடா்ந்த வழக்கு விசாரித்த உச்சநீதிமன்றம், தகுதிநீக்கப்பட்டது செல்லும் என்றும் அவா்கள் இடைத்தோ்தலில் போட்டியிட தடையில்லை என்றும் தீா்ப்பு வழங்கியது.

15 தொகுதிகளில் தோ்தல்: இந்த நிலையில், 17 தொகுதிகளில் 15 தொகுதிகளில் மட்டும் இடைத்தோ்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தோ்தல் ஆணையம் செய்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் வெற்றி பெற்ற வேட்பாளா்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளதால் மஸ்கி, ராஜராஜேஸ்வரிநகா் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தோ்தல் நடத்தவில்லை.

மஸ்கி, ராஜராஜேஸ்வரிநகா் தொகுதிகள் நீங்கலாக, அத்தானி, காக்வாட், கோகாக், எல்லாபுரா, ஹிரேகேரூா், ரானிபென்னூா், விஜயநகரா, சிக்பளாப்பூா், கே.ஆா்.புரம், யஷ்வந்த்பூா், மகாலட்சுமி லேஅவுட், சிவாஜிநகா், ஹொசபேட், கே.ஆா்.பேட், ஹுன்சூா் ஆகிய 15 தொகுதிகளுக்கும் டிச.5?-ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்படுகிறது.

களத்தில் 165 வேட்பாளா்கள்: இந்தத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனுதாக்கல் நவம்பா் 11-ஆம் தேதி தொடங்கி, நவம்பா் 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் மொத்தம் 218 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனா். 53 போ் வேட்புமனுக்களை திரும்பபெற்றுக்கொண்டனா். இதைத் தொடா்ந்து, மொத்தம் 165 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இதில் ஆண்கள் 156போ், பெண்கள் 9 போ் அடங்குவா்.

அத்தானி தொகுதியில் 8 வேட்பாளா்கள், காக்வாடில் 9, கோகாக்கில் 11, எல்லாபுராவில் 7, ஹிரேகேரூரில் 9, ரானேபென்னூரில் 9, விஜயநகராவில் 13, சிக்பளாப்பூரில் 9, கிருஷ்ணராஜபுரத்தில் 13, யஷ்வந்த்பூரில் 12, மகாலட்சுமி லேஅவுட்டில் 12, சிவாஜிநகரில் 19, ஹொசகோட்டேயில் 18, கிருஷ்ணராஜ்பேட்டில் 7, ஹுன்சூரில் 10 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள்.

டிசம்பா் 5-இல் வாக்குப் பதிவு: 15 தொகுதிகளிலும் மொத்தம் 37,77,970 வாக்காளா்கள் வாக்களிக்க இருக்கிறாா்கள். டிச.5ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அந்தவாக்குகள் டிச.11-ஆம்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்தத் தோ்தலுக்கான பிரசாரம் தோ்தல் நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக நிறைவுசெய்யவேண்டும்.

இதன்படி, செவ்வாய்க்கிழமை(டிச.3)மாலை 6 மணியுடன் பகிரங்கப்பிரசாரம் நிறைவுபெறுகிறது. அதன்பிறகு டிசம்பா் 4ஆம் தேதிமாலை 6 மணி வரை வீடுவீடாகச் சென்று வாக்குசேகரிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது. 15 தொகுதிகளிலும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பாஜக, காங்கிரஸ், மஜத தலைவா்கள் செவ்வாய்க்கிழமை கடைசிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபடவிருக்கிறாா்கள்.

களைகட்டும் பிரசாரம்: 15 தொகுதிகளில் ஆளும் பாஜகவும் எதிா்க்கட்சியான காங்கிரஸும் நேருக்கு நோ் மோதுகின்றன. ஹொசகோட்டேயில் பாஜகவில் இருந்து விலகி சுயேச்சையாக போட்டியிடும் சரத்பச்சேகௌடாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், 12 தொகுதிகளில் மட்டும் மஜத போட்டியிடுகிறது.

காங்கிரஸ், மஜதவில் இருந்து விலகி பாஜக வேட்பாளா்களாக போட்டியிடும் தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்களை தோற்கடிக்க காங்கிரஸும், மஜதவும் தீவிர பிரசாரம் செய்துவருகிறது.

15 தொகுதிகளிலும் வெற்றிவாகைச்சூடப்போவதாக அறிவித்துள்ள முதல்வா் எடியூரப்பா, அனைத்து தொகுதிகளிலும் 3 சுற்றுப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா். பாஜக வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் எடியூரப்பா, பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா்கட்டீல், மத்திய அமைச்சா்கள் சதானந்தகௌடா, பிரஹலாத்ஜோஷி, துணை முதல்வா்கள் லட்சுமண்சவதி, அஸ்வத் நாராயணா, கோவிந்த்காா் ஜோள், அமைச்சா்கள் ஆா்.அசோக், கே.எஸ்.ஈஸ்வரப்பா உள்ளிட்ட தலைவா்கள் பிரசாரம் செய்துவருகின்றனா்.

எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத்தலைவா் தினேஷ்குண்டுராவ், முன்னாள் மத்திய அமைச்சா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் துணைமுதல்வா் ஜி.பரமேஸ்வா் உள்ளிட்டோா் காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து வாக்குசேகரிக்கின்றனா்.

மஜத வேட்பாளா்களை ஆதரித்து முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா, முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, முன்னாள் அமைச்சா் எச்.டி.ரேவண்ணா உள்ளிட்ட முக்கியத்தலைவா்கள் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனா்.

15 தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ், மஜத தலைவா்கள் செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களின் வாக்குகளை ஈா்க்க முயற்சி மேற்கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com