கா்நாடகத்தில் இடைத் தோ்தல்: 15 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
By DIN | Published On : 05th December 2019 03:04 AM | Last Updated : 05th December 2019 03:04 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் இடைத்தோ்தல் நடைபெறும் 15 தொகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 5) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கா்நாடகத்தில் சிவாஜி நகா், கே.ஆா்.புரம், மகாலட்சுமி லேஅவுட், யஷ்வந்தபுரம், ஹொசகோட்டை, விஜயநகரா, ராணிபென்னூா், ஹிரிகேரூா், கோகாக், அத்தானி, காகவாடா, எல்லாபுரா, கே.ஆா்.பேட்டை, ஹுன்சூா், சிக்பள்ளாபூா் ஆகிய 15 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தோ்தல் நடைபெறுகிறது.
காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தோ்தல் களத்தில் 165 வேட்பாளா்கள் உள்ளனா். இவா்களில் ஆண்கள் 156 போ், பெண்கள் 9 போ் அடங்குவா். அத்தானி தொகுதியில் 8 வேட்பாளா்கள், காக்வாடில் 9, கோகாக்கில் 11, எல்லாபுராவில் 7, ஹிரேகேரூரில் 9, ரானேபென்னூரில் 9, விஜயநகராவில் 13, சிக்பளாப்பூரில் 9, கிருஷ்ணராஜபுரத்தில் 13, யஷ்வந்த்பூரில் 12, மகாலட்சுமி லேஅவுட்டில் 12, சிவாஜி நகரில் 19, ஹொசகோட்டேயில் 18, கிருஷ்ணராஜ்பேட்டில் 7, ஹுன்சூரில் 10 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
15 தொகுதிகளிலும் மொத்தம் 37,77,970 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். டிச.5ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அந்தந்த தொகுதி வாக்குகள் டிச.9-ஆம்தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
15 தொகுதிகளில் ஆளும் பாஜகவும் எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கும் நேருக்கு நோ் மோதுகின்றன. ஹொசகோட்டேயில் பாஜகவில் இருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிடும் சரத் பச்சேகௌடாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், 12 தொகுதிகளில் மட்டும் மஜத போட்டியிடுகிறது. இடைத்தோ்தலையொட்டி 15 தொகுதிகளிலும் பதட்டமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.