Enable Javscript for better performance
மஜத-காங்கிரஸ் கூட்டணி குழப்பத்துக்கு காரணம் யார்?- Dinamani

சுடச்சுட

    

    மஜத-காங்கிரஸ் கூட்டணி குழப்பத்துக்கு காரணம் யார்?

    By DIN  |   Published on : 01st February 2019 04:19 AM  |   அ+அ அ-   |    |  


    ஆட்சி மற்றும் அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பாக காங்கிரஸ், மஜத தலைவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள போட்டியால் மஜத-காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பம் உருவாகியுள்ளது. 
    கர்நாடக அரசியலில் எதிரும் புதிருமாகயிருந்த மஜதவும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துவதை அக்கட்சியை சேர்ந்த தொண்டர்களால் ஆட்சிக்கு வந்து 7 மாதங்களாகியும் நம்பமுடியவில்லை. மஜதவை காங்கிரஸ் தொண்டர்களாலும், காங்கிரஸை மஜத தொண்டர்களாலும் அரசியல்ரீதியாக அல்ல, கொள்கை ரீதியாகக்கூட ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
    அரசியல் எதிரி... இப்போது நண்பன்!
    மஜத செல்வாக்கோடு திகழும் தென்கர்நாடக மாவட்டங்களில் மஜத மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையிலான இடைவெளி நாளுக்குநாள் நீண்டுவருகிறதே தவிர, சுருங்கவில்லை. மைசூரு, மண்டியா, ஹாசன், தும்கூரு, பெங்களூரு ஊரகம், சாமராஜ்நகர், கோலார், சிக்பளாப்பூர் போன்ற தென்கர்நாடக மாவட்டங்களில் மஜத அதீத செல்வாக்கோடு திகழ்ந்து வருகிறது. இங்கு மஜதவுக்கு அரசியல் எதிரியே காங்கிரஸ்தான்.
    வட கர்நாடகத்தில் மஜதவுக்கு வாக்குவங்கி போதுமானதாக இல்லை. அங்கு, காங்கிரசின் அரசியல் எதிரி பாஜகதான். தென்கர்நாடகத்தில் பாஜகவுக்கு போதிய மக்கள் செல்வாக்கோ, வாக்குவங்கியோ இல்லை. தென்கர்நாடகத்தில் நடக்கும் எல்லா சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் மற்றும் மஜத வேட்பாளர்கள்தான் நேரடியாக மோதிக்
    கொள்வார்கள்.
    சகித்துக் கொள்ள முடியவில்லை
    கடந்த 5 ஆண்டுகளாக சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவந்தது. பெரிய குறைகள் எதுவுமில்லாமல், நல்லாட்சி நடந்தபோதும், மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாமல் தோல்வியை கண்டது. இதை காங்கிரஸ் தலைவர்களாலும், தொண்டர்களாலும் இன்றைக்கும் மறக்கமுடியாது. 
    தென்கர்நாடகத்தில் வழக்கமாக வெற்றிபெறும் இடங்களை மஜதவிடம் இழந்துள்ள காங்கிரஸ், தனது தோல்விக்கு அக்கட்சியே காரணம் என்பதை மறக்க முடியாமல் தவித்து வந்துள்ளது. முதல்வராக இருந்த சித்தராமையாவை அவரது சொந்த மைசூரு மாவட்டத்தின் சாமுண்டீஸ்வரி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குவித்தியாசத்தில் தோல்வியை சந்திக்கவைத்தது மஜததான். பாதாமி தொகுதியிலும் சொற்ப வாக்குவித்தியாசத்திலே சித்தராமையா வெற்றி பெற்றுள்ளார். தனது அரசியல்வாழ்க்கையின், அதுவும் முதல்வராக இருந்துகொண்டு பெற்ற தோல்வியை சித்தராமையாவால் நம்பமுடியாதது மட்டுமல்ல, ஏற்கமுடியாமல் துடித்துவருகிறார். 
    ஏற்கமுடியவில்லை
    முந்தைய சித்தராமையா அரசில் அமைச்சர்களாகயிருந்த 17 பேரும் கடந்த பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மஜதவிடம் தோற்றனர். அரசியல் எதிரியாக கருதப்படும் மஜதவுடன் இணைந்து ஆட்சி அமைத்ததை காங்கிரஸ் தொண்டர்கள், முக்கியமாக தலைவர்கள் ரசிக்கவில்லை. பாஜகவை ஆட்சியில் வரவிடாமல் தடுக்க மஜத ஆட்சி அமைக்க  நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்திருந்தாலும், அதை ராகுல் காந்தியை தவிர கர்நாடக காங்கிரஸாரால் ஏற்க முடியவில்லை.
    மஜத தலையீடு
    இத்தனைக்கும் பிறகும், மஜதவின் கைப்பாவையாக காங்கிரஸ் செயல்படவேண்டும் என்று முதல்வர் குமாரசாமி எதிர்பார்ப்பதை கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் விரும்பவில்லை. ராகுல் காந்தியின் விருப்பத்திற்காகவே அனைத்தையும் சகித்துவரும் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தென்மாவட்டங்களில் காங்கிரஸை அழிக்க மஜத முயற்சிப்பதாக குறைகூறுகிறார்கள். 
    மஜத அமைச்சரும், முதல்வர் குமாரசாமியின் சகோதரருமான எச்.டி.ரேவண்ணா, காங்கிரஸ் அமைச்சர்களின் துறைகளில் தலையிடுவதோடு, அத்துறை சார்ந்த பணியிடமாற்றங்கள், ஒப்பந்தப்புள்ளி, ஒப்பந்தங்கள் கையெழுத்திடுதல் போன்றவற்றில் தேவையில்லாமல் தலையிட்டுவருவதாக எரிச்சலில் உள்ளனர். 
    அதிகாரம் பறிப்பு
    முக்கிய துறைகளின் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை மஜதவுக்கு சாதகமாக முதல்வர் குமாரசாமி நியமித்துவருவதாக காங்கிரஸார் வேதனை தெரிவிக்கிறார்கள். சித்தராமையாவின் தொகுதியிலேயே மஜதவுக்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகளை நியமித்துள்ளது அவரையும் அதிருப்தி அடைய செய்துள்ளது. காவல் துறையில் நடக்கும் பணியிடமாற்றங்கள், அத்துறையின் காங்கிரஸ் அமைச்சர் எம்.பி.பாட்டீலுக்கு தெரியாமலே நடப்பது அவரை கோபமடைய செய்துள்ளது. பெங்களூரில் உள்ள 28 தொகுதிகளில் 15-இல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களின் தொகுதிகளில் எந்தவளர்ச்சிப்பணிக்கும் இதுவரை நிதி ஒதுக்கவில்லை என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புகார் தெரிவித்துவருகிறார்கள். 
    அரசியல் சூழ்ச்சி
    ஹாசன், மண்டியா, மைசூரு மாவட்டங்களில் காங்கிரஸாரை நெருக்குவதோடு, மஜதவுக்கு சாதகமான சூழலை உருவாக்க தீவிரமுயற்சியில் ஈடுபட்டுள்ளதை காங்கிரஸ் தலைவர்களால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. கூட்டணியைப் பயன்படுத்திக்கொண்டு காங்கிரசை பலவீனமாக்கி, மஜதவை பலப்படுத்திக்கொள்ள முதல்வர் குமாரசாமி திட்டம் தீட்டி, அதற்கேற்ப செயல்பட்டுவருவதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூறுகிறார்கள். 
    வாரியங்கள், கழகங்களுக்கு தலைவர்களாக நியமிக்க காங்கிரஸ் பரிந்துரைத்த எம்எல்ஏக்களின் பட்டியலை ஏற்றுக்கொண்டு உத்தரவு பிறப்பிக்க முதல்வர் குமாரசாமி ஒரு மாதத்திற்கு மேல் எடுத்துக்கொண்டதும் அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    மக்களை சந்திக்க முடியவில்லை
    காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு தடை ஏற்படுவதை சித்தராமையாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதேநிலை நீடித்தால் தொண்டர்கள் மாற்றுக்கட்சிக்கு செல்லும் அபாயம் ஏற்படும் என்று சித்தராமையா கருதுகிறார். கூட்டணி ஆட்சி நடந்தாலும் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பணியிடமாற்றம் போன்ற கோரிக்கைகளை முதல்வர் குமாரசாமி செயல்படுத்தவேண்டும் என்று சித்தராமையா விரும்புகிறார். 
    கூட்டணியில் இருந்தபோதும் தொகுதி வளர்ச்சி நிதி ஒதுக்காவிட்டால் மக்களிடம் போய் எப்படி வாக்குசேகரிப்பது என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புலம்புகிறார்கள். சாமுண்டீஸ்வரி தொகுதியில் தன்னை மோசமாக தோற்கடித்த, ஒருகாலத்தில் தனது அரசியல் குருவாக இருந்து, எதிரியாக மாறிய எச்.டி.தேவெ கெளடாவின் மகன் எச்.டி.குமாரசாமி முதல்வராக பதவி வகித்துள்ளதை சித்தராமையாவால் ஏற்கமுடியவில்லை. 
    கூட்டணி நீடிக்குமா?
    தேவெகெளடா, குமாரசாமியின் அரசியல் துரோகங்களை மறக்கமுடியாமல் தவித்துவரும் சித்தராமையாவை முன்னிலைப்படுத்தி மஜதவை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாகவே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிப்படையாக சில கருத்துக்களை கூறிவருகிறார்கள். இது தேவெகெளடா, குமாரசாமியின் எரிச்சலுக்கு காரணமாக அமைந்துள்ளது. இது காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வெகுவாக பாதித்துள்ளதோடு, அரசியல் குழப்பத்துக்கு வழி வகுத்துள்ளது. ராகுல்காந்தியின் அறிவுரையின்பேரில் மக்களவை தேர்தல் வரை பொறுத்திருக்க முடிவுசெய்திருந்தாலும், அதுவரை கூட்டணி அரசை நகர்த்திக் கொண்டு போகும் நம்பிக்கை சித்தராமையாவுக்கு மட்டுமல்ல, தேவெகெளடா, குமாரசாமிக்கும் இல்லை என்றும் கூறப்படுகிறது.மக்களவைத் தேர்தல் வரை கூட்டணி தொடர்ந்தாலும், அதன்பிறகு கூட்டணி உடையும் என்பதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகிறது.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp