பெங்களூரில் பிப்.20 முதல் பன்னாட்டு விமானத் தொழில் கண்காட்சி தொடக்கம்

பெங்களூரில் பிப்.20-ஆம் தேதி முதல் பன்னாட்டு விமான தொழில் கண்காட்சி நடைபெறுகிறது.


பெங்களூரில் பிப்.20-ஆம் தேதி முதல் பன்னாட்டு விமான தொழில் கண்காட்சி நடைபெறுகிறது.
விமானத் தொழில் மற்றும் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தித் தொழிலை ஊக்குவிப்பதற்காக 1996-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பன்னாட்டு விமானத் தொழில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், பெங்களூரில் எலஹங்காவில் உள்ள விமானப் படை நிலையத்தில் பிப்.20-ஆம் தேதி தொடங்குகிறது. 
பிப்.24-ஆம் தேதிவரை 5 நாள்களுக்கு நடக்கவிருக்கும் பன்னாட்டு விமானத் தொழில் கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடக்கிவைக்கிறார். மத்திய பாதுகாப்புத் துறையின் கீழுள்ள ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) மேற்பார்வையில் ராணுவ கண்காட்சி அமைப்பு சார்பில் நடத்தப்படும் இந்த கண்காட்சியில் 31 வகையான விமானங்களின் தொழில்நுட்ப சாகசங்கள் காட்சிப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 
இந்த கண்காட்சியில் இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் 350 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. கண்காட்சியை காண 5 லட்சம் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்கள் வருகைதருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
மேலும் விமான தொழிலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகள், தொலைவிடம் சென்று தாக்கும் ஏவுகணைகள், விமானவியல் தொழில் நுட்பங்கள் சார்ந்த அரங்குகளும் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. இந்தியாவில் முப்படைக்கும் தேவையான விமானங்கள், ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள், ரேடார்கள், தொலை உணர்வு தொழில்நுட்பங்கள், கண்காணிப்பு முறை கருவிகள், விமான மின்னணுவியல், போரியல், உந்துவிசை கருவிகள் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. மேலும் 5 நாள்களும் வானத்தில் விமானங்களில் சாகசங்கள் நடைபெற உள்ளன.
போர் விமானங்களின் சிமுலேட்டர்கள் இடம்பெறவுள்ளன. கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. பிப்.21-ஆம் தேதி ஆரம்பநிலை தொழில்முனைவோரின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பிப்.23-ஆம் தேதி பெண்விமானிகள் சாகசங்கள் இடம்பெறும். இதுதவிர, தேனன்களின்(ட்ரோன்கள்)சந்தை விரிவடைந்து வருவதை முன்னிட்டு, புதிய தேனன்கள் கண்காட்சியும் நடக்கவிருக்கிறது. 
பிப்.22-ஆம் தேதி தொழில்நுட்பத் தினமாக அனுசரிப்பதால், அன்றைக்கு விமானவியலில் சம்பந்தப்பட்ட நுட்பர்கள், மாணவர்களின் திட்டங்களை காட்சிப்படுத்த வாய்ப்பளிக்கப்படுகிறது. இதுதவிர, பறக்கும்பொருள்கள் என்ற தலைப்பில் புகைப்படப்போட்டியும் நடத்தப்படுகிறது.
பிப்.20-24-ஆம் தேதிகளில் தினமும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கண்காட்சியைக் காண வர்த்தக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கு கட்டணம் ரூ. 1,800 ஆகும். விமானசாகசங்களை காண 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கு கட்டணம் ரூ. 600 ஆகும். மேலும் விவரங்களை   இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com