பெங்களூரில் பிப்.8 முதல் புத்தகக் கண்காட்சி
By DIN | Published On : 06th February 2019 08:53 AM | Last Updated : 06th February 2019 08:53 AM | அ+அ அ- |

பெங்களூரில் பிப்.8-ஆம் தேதி முதல் கன்னட புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இதுகுறித்து கன்னட புத்தக ஆணையத்தின் தலைவர் வசுந்தரா பூபதி பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: கன்னட புத்தக ஆணையம் சார்பில் பெங்களூரு, ஜே.சி.சாலையில் உள்ள ரவீந்திரகலாஷேத்ராவில் பிப்.8 முதல் 12-ஆம் தேதிவரை 5 நாள்கள் கன்னட புத்தகக் கண்காட்சி நடக்கவிருக்கிறது. இக்கண்காட்சியில் சலுகைக் கட்டணத்தில் புத்தகம் விற்பனைக்கு கிடைக்கும். கண்காட்சியில் அரங்கம் அமைக்க விரும்பும் பதிப்பகங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அரங்கம் அமைப்பவர்களுக்கு இலவச உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும். கண்காட்சியில் 30-க்கும் அதிகமான பதிப்பாளர்கள் அரங்கம் அமைக்க முன்வந்துள்ளனர். பிப். 8-ஆம் தேதி புத்தகக் கண்காட்சியை ஞானபீட விருது பெற்ற இலக்கியவாதி சந்திசேகர் கம்பாரே தொடக்கிவைக்க உள்ளார். நிகழ்ச்சியில் கன்னட மற்றும் கலாசாரத் துறையின் இயக்குநர் கே.எம்.ஜானகி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களுக்கு 10 முதல் 15 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என்றார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...