ஆடியோ விவகாரம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்படும்; கர்நாடக முதல்வர் குமாரசாமி

ஆடியோ விவகாரம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

ஆடியோ விவகாரம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
 மஜத எம்.எல்.ஏ. நாகன கெüடாவின் மகன் சரண் கெüடாவுடன் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா பேரம் பேசி பாஜகவுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக ஆடியோ வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் குமாரசாமியும் கடந்த பிப். 8-இல் பேட்டி அளித்துள்ளது பெரும் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. இந்த விவகாரம் கர்நாடக சட்டப்பேரவையிலும் திங்கள்கிழமை எதிரொலித்தது.
 இதுதொடர்பாக நடைபெற்ற விவாதம்:-
 பேரவைத் தலைவர் ரமேஷ் குமார்: மாற்றுக் கட்சியினரை இழுக்கும் விவகாரத்தில் என் பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.வின் ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ள ரூ.50 கோடி பேரம் பேசியதாக அந்த உரையாடலில் கூறப்பட்டுள்ளது. அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற இழுக்கை சுமக்க மனமில்லை. எனவே, களங்கத்தைத் துடைத்தெறிய, இது தொடர்பாக அவை அவமதிப்பு, உரிமைமீறல் பிரச்னையை கொண்டுவருகிறேன்.
 சித்தராமையா: பேரவைத் தலைவர் மீது எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால், அவர் பதவி மீது களங்கம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே, அந்த களங்கத்தை போக்க உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும். அதற்கு இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், கடும் தண்டனை விதிக்கப்படவேண்டும்.
 பேரவைத் தலைவர் ரமேஷ்
 குமார்: இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி)அமைக்க முதல்வர் குமாரசாமியை கேட்டுக்கொள்கிறேன். இந்த விசாரணை 15 நாள்களுக்குள் முடிக்க வேண்டும்.
 முதல்வர் குமாரசாமி: பேரவைத் தலைவர் ரமேஷ்குமாரின் நேர்மை, நாணயம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால், அப்படிப்பட்டவர் மீது களங்கம் சுமத்த முற்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இந்த விவகாரத்தை அதன் மூலத்தில் இருந்து விசாரிக்க வேண்டும். அதற்காக தாங்கள் கேட்டுக் கொண்டபடி, சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க அனுமதி கோருகிறேன்.
 பாஜக எம்எல்ஏ மாதுசாமி: சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை பேரவைத் தலைவர் பற்றி அவதூறு பேசியது யார்? என்பதை மட்டும் விசாரிக்க வேண்டும். ஆடியோ விவரங்களை விசாரித்தால், நாங்களும் சில குற்றச்சாட்டுகளை கூற விரும்புகிறோம். மேலும் எஸ்ஐடி விசாரணைக்கு யார் தலைமை தாங்க வேண்டுமென்பதை பேரவைத் தலைவரே முடிவுசெய்ய வேண்டும்.
 இந்த விவகாரத்தில் முதல்வர் குமாரசாமியும் ஈடுபட்டுள்ளதால், அவரது தலைமையில் உள்ள அரசு நியமிக்கும் விசாரணைக் குழுவின் மீது பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை என்றார்.
 விசாரணைக் குழுவின் மீது நம்பிக்கை இல்லை என்ற பாஜக விடுத்த கோரிக்கையை காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏற்காததால், அவையில் பாஜக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
 பாஜகவின் கோரிக்கையை ஏற்க பேரவைத் தலைவர் ரமேஷ்குமாரும் ஒப்புக்கொள்ளாததால், பாஜகவினர் கூச்சலிட்டபடியே இருந்தனர். இதைத் தொடர்ந்து, அவை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 எடியூரப்பா மௌனம்
 விவாதத்தின்போது, , பாஜக உறுப்பினர் மாதுசாமிக்கும், அமைச்சர் கிருஷ்ணபைரே கெüடாவுக்கும் இடையே உரிமை மீறல் எது? என்பது தொடர்பாக நீண்டவிவாதம் நடைபெற்றது. இந்த நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மாநிலத் தலைவருமான எடியூரப்பா அவையில் பேசாமல் மெüனமாகவே இருந்தார்.
 அவையில் பாஜக உறுப்பினர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், மாதுசாமி, சி.டி.ரவி, கே.எஸ்.ஈஸ்வரப்பா, கோவிந்த்கார்ஜோள், மஜத உறுப்பினர் அமைச்சர் சா.ரா.மகேஷ், ஏ.டி.ராமசாமி, காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னாள் முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் கிருஷ்ணபைரே கெüடா, டி.கே.சிவக்குமார், உறுப்பினர்கள் கே.எச்.பாட்டீல், தினேஷ்குண்டுராவ் உள்ளிட்டோரும் பேசினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com