மக்களவைத் தேர்தல்: பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் தொடர் பிரசார திட்டம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசியக் கட்சிகளும் தொடர் பிரசாரங்களுக்கு திட்டமிட்டுள்ளன

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசியக் கட்சிகளும் தொடர் பிரசாரங்களுக்கு திட்டமிட்டுள்ளன.
 மக்களவைத் தேர்தல் தேதி அடுத்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசியக் கட்சிகளும், தொடர் பிரசார திட்டங்களை வகுத்துள்ளன.
 மாநில அளவிலான பல்வேறு அரசியல் கட்சிகள் மக்களவைத் தேர்தல் களத்தில் இருந்தாலும், தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே தான் நேரடிப் போட்டி நடைபெற இருக்கிறது. கர்நாடகத்திலும் இரு கட்சிகளுக்கு இடையே தான் கடுமையான போட்டி உள்ளது. இதைத் தொடர்ந்து, இரு கட்சிகளும் மக்களைச் சந்தித்து வாக்குகளை திரட்ட தொடர் பிரசாரங்களில் ஈடுபடவுள்ளன.
 பாஜக: பாஜக தனது பிரசாரத்தை பிப். 12-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. வீட்டுக்குவீடு பாஜக என்ற பிரசார திட்டத்தின்கீழ், வீடுவீடாகச் சென்று பிரதமர் மோடி அரசின் சாதனைகளை பிரசாரம் செய்வதோடு, பாஜக கொடிகளை வீடுகளில் ஏற்றுகிறார்கள்.
 இது தவிர, எல்லா வீடுகளிலும் "நம்ம வீடு, பாஜக வீடு' என்ற ஒட்டிகளை (ஸ்டிக்கர்)வீட்டு வாசலில் ஒட்ட இருக்கிறார்கள். பிப். 26-ஆம் தேதி முதல் "பாஜக ஒளிவிளக்கு' என்ற பிரசாரத்தை முன்னாள் அமைச்சர் ஷோபாகரந்தலஜே, பாரதிஷெட்டியின் தலைமையில் நடத்த இருக்கிறார்கள்.
 மத்திய அரசு கொண்டுவந்துள்ள இலவச எரிவாயு திட்டம், மக்கள்நிதி திட்டம், ஆரோக்கிய இந்தியா திட்டங்களின் பயனாளிகளை சந்தித்து, அவர்களின் வீடுகளில் ஒளிவிளக்கு ஏற்றிவைத்து பாஜகவுக்கு செலுத்தவேண்டிய நன்றிக் கடனை செலுத்துமாறு கேட்டுக்கொள்ள இருக்கிறார்கள். மார்ச் 2-ஆம் தேதி முதல் பாஜக இளைஞர் அணியின் சார்பில் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தி பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்க இருக்கிறார்கள். அடிமட்டத்தில் கட்சியை பலமாக வைத்திருக்கும் பாஜக பிரசாரம் செய்வதிலும், பிரதமர் மோடியை மையப்படுத்தி மக்களின் நல்லதாரவை பெற முயற்சிப்பதில் கவனம் செலுத்தவுள்ளது.
 காங்கிரஸ்: பாஜகவை போல அடிமட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பலம் வாய்ந்த தொண்டர்கள் இல்லை. இந்தக் குறையைப் போக்குவதற்காக மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தொடங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. பிப். 15-ஆம் தேதி முதல் "மக்கள்தொடர்பு' பிரசாரத் திட்டத்தை தொடங்க இருக்கிறார்கள். ஒருமாதம் நடைபெற உள்ள இந்த பிரசாரத்தில் முந்தைய காங்கிரஸ் அரசின் சாதனைகள் அடங்கிய கையேட்டை வீடுவீடாக மக்களை சந்தித்து வழங்க இருக்கிறார்கள்.
 பிரதமர் மோடியை மையப்படுத்தி பாஜக பிரசாரத்தை மேற்கொண்டு வருவதால், அதற்கு எதிர்மறையான பிரசாரத்தில் ஈடுபட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடியின் தோல்விகள், பொய்களை வீடுவீடாகச் சென்று பிரசாரம் செய்ய இருக்கிறார்கள். இதற்காக "பச்சை பொய்களின் அரசன்', "வாய்மொழி சேவகன்' என்ற இரு கையேடுகளை காங்கிரஸ் தயாரித்துள்ளது. இவற்றை மக்களிடம் விநியோகிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
 இதுதவிர, செல்லிடப்பேசி செயலிகள் வழியாகவும் பிரசாரம் செய்ய காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது. இதன்மூலம் 70-80 சதவீத வீடுகளை சென்றடைவதை காங்கிரஸ் நோக்கமாக கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com