தொலைபேசி உரையாடலைப் பதிவு செய்ய உத்தரவிடவில்லை: முதல்வர் குமாரசாமி

மஜத எம்எல்ஏவை பாஜகவில் இணைப்பதற்காக நடத்தப்பட்ட தொலைபேசி உரையாடலைப் பதிவு செய்ய நான் உத்தரவிடவில்லை என்றார் முதல்வர் குமாரசாமி.

மஜத எம்எல்ஏவை பாஜகவில் இணைப்பதற்காக நடத்தப்பட்ட தொலைபேசி உரையாடலைப் பதிவு செய்ய நான் உத்தரவிடவில்லை என்றார் முதல்வர் குமாரசாமி.
கர்நாடக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை ஆடியோ விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜகவினர் விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, முதல்வர் குமாரசாமி பேசியது: மஜத எம்எல்ஏ நாகன கெளடாவின் மகன் சரண் கெளடாவுடன் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா பேரம் பேசியதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடலை நான் பதிவு செய்துள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த உரையாடலைப் பதிவு செய்யுமாறு நான் கூறவில்லை. சரண் கெளடாவை பாஜகவினர் அழைத்தபோது, நான் சென்று வருமாறு கூறினேன். அங்கு இவர்கள் ஏதேதோ பேசியதை தொலைபேசி மூலம் சரண்கெளடாவே பதிவு செய்துள்ளார். இதனை என் மீது தவறு இருப்பதாகக் கூறி, பாஜகவினர் சிறப்பு புலனாய்வு விசாரணையை எதிர்க்கின்றனர். 
ஆபரேஷன் கமலா திட்டத்தில் எம்.எல்.ஏக்களை பேரம் பேசுவதில் எந்த விதத்தில் நியாயம். ஜனநாயகத்திற்கு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தொலைபேசி உரையாடல் குறித்து உரிய விசாரணை நடைபெற வேண்டும். அப்போதுதான் தவறு செய்தவர்களை அடையாளம் காண முடியும் என்றார்.
 


பேரவைத் தலைவர் இன்று ஆலோசனை
ஆடியோ விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து இன்று ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.
மஜத எம்எல்ஏ நாகன கெளடா மகன் சரண்கெளடாவுடன் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா பேரம் பேசியது தொடர்பான ஒலிப்பதிவு துணுக்கை முதல்வர் குமாரசாமி கடந்த பிப்.8-ஆம் தேதி வெளியிட்டார். மேலும், அதில் பேரவைத் தலைவர் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து திங்கள்கிழமை பேரவையில் விவாதிக்கப்பட்டது. சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஒப்படைப்பது என மஜத, காங்கிரஸ் முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பாஜகவினர் பேரவையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா பேசுகையில், விசாரணை தொடர்பாக எதிர்க்கட்சிகளை பேரவைத் தலைவர் தனது அறைக்கு பேச வேண்டும் என்றார். இதனை ஏற்றுக் கொண்ட பேரவைத் தலைவர் ரமேஷ்குமார், புதன்கிழமை காலை 10.30 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜக உறுப்பினர்கள் சிலரும், முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட சில அமைச்சர்களும், உறுப்பினர்களும் தனது அறையில் சந்திக்க வேண்டும். அப்போது இது தொடர்பாக ஆலோசனை நடத்தி உரிய முடிவை எடுக்கலாம். ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு முற்பகல் 11.30 மணியளவில் சட்டப்பேரவைக் கூடும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com