ஆடியோ விவகாரம்: எஸ்ஐடி விசாரணைக்கு பாஜக எதிர்ப்பு

மஜத எம்எல்ஏவை பாஜகவில் இணைக்க எடியூரப்பா பேரம் பேசியதாக வெளியான ஒலிப்பதிவு துணுக்கு குறித்து

மஜத எம்எல்ஏவை பாஜகவில் இணைக்க எடியூரப்பா பேரம் பேசியதாக வெளியான ஒலிப்பதிவு துணுக்கு குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரிக்க எதிர்ப்புத் தெரிவித்து பேரவையில் 3-ஆவது நாளாக பாஜகவினர் தர்னாவில் ஈடுபட்டனர்.
மஜத எம்எல்ஏ நாகன கெளடாவின் மகன் சரண் கெளடாவுடன் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா பேரம் பேசி பாஜகவுக்கு வருமாறு அழைப்புவிடுத்தது தொடர்பான ஒலிப்பதிவு துணுக்கை கடந்த பிப்.8-ஆம் தேதி முதல்வர் குமாரசாமி பகிரங்கப்படுத்தினார். 
இந்த விவகாரத்தில் பேரவைத் தலைவர் ரமேஷ் குமாருக்கு ரூ.50 கோடி அளிக்க பேரம் பேசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க பேரவைத் தலைவர் ரமேஷ்குமார், அரசுக்கு வழிகாட்டுதல் வழங்கியிருந்தார்.  இதைத் தொடர்ந்து,  சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று முதல்வர் குமாரசாமி உத்தரவாதம் அளித்தார். 
மேலும்,  மாற்றுக் கட்சி எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுக்க கடந்த 8 மாதங்களாக நடத்தப்பட்ட தொடர் பேரம் குறித்து விசாரிக்கப் போவதாகவும் முதல்வர் குமாரசாமி அறிவித்திருந்தார்.  இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 
புதன்கிழமையும் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர்.  இதனிடையே, எத்தினஹொளே குடிநீர்த் திட்ட நில கையகப்படுத்தல் சட்ட மசோதா,  என்ஐஇ பல்கலைக்கழக சட்ட மசோதா,  ஆதிசுன்சுனகிரி பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா,  பசவ கல்யாண் வளர்ச்சிக் கழக சட்ட மசோதா,  மாநில குடிமைப் பணி ஆசிரியர் பணியிட மாற்ற சட்ட மசோதா உள்ளிட்ட  8 சட்ட மசோதாக்களை குரல் வாக்கெடுப்பின் மூலம் பேரவைத் தலைவர் ரமேஷ்குமார்
நிறைவேற்றினார். 
    போராட்டத்தை கைவிடுமாறு பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் விடுத்த வேண்டுகோளை ஏற்காமல் பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து தர்னா போராட்டம் செய்ததால்,  பிற்பகல் 3 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.  இதனிடையே,  பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளின் சட்டப்பேரவைக் குழுக்களின் தலைவர்களுடன் பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் மேற்கொண்ட சமரச முயற்சி தோல்வியடைந்தது. 
அதன்பிறகு, பிற்பகல் 4 மணிக்கு அவை மீண்டும் கூடிய போது, தர்னாவைத் தொடர்ந்த பாஜக உறுப்பினர்கள், ஹாசன் எம்எல்ஏ பிரீத்தம் கெளடாவின் வீட்டை மஜத தொண்டர்கள் தாக்கியது தொடர்பாக பிரச்னை எழுப்பினர்.  இதுதொடர்பாக பாஜக- மஜத உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால்,  அவையில் கூச்சல்,  குழப்பம் நிலவியது.  இதைத் தொடர்ந்து, அவையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com