பயங்கரவாதத் தாக்குதலை அரசியலாக்க வேண்டாம்: மல்லிகார்ஜுன கார்கே
By DIN | Published On : 20th February 2019 08:10 AM | Last Updated : 20th February 2019 08:10 AM | அ+அ அ- |

காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அரசியலாக்க வேண்டாம் என மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர கூறியது: அண்மையில் காஷ்மீர் மாநிலம், புலவாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவத்தால் தேசிய அளவில் மக்கள் அனைவரும் வேதனை அடைந்துள்ளனர். இதில் சக வீரர்களின் மன தைரியம் குறையும் வகையிலான நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக்கூடாது. அதே நேரத்தில் நாட்டுப்பற்று எனக் கூறிக்கொண்டு, யாரும் தங்களை தாங்களே புகழ்ந்து கொள்ளவும் கூடாது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி எந்த எதிர்ப்பும் தெரிவிக்காது. பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு, எதிராக ராணுவம் எந்த நடவடிக்கை மேற்கொண்டாலும் அதற்கு காங்கிரஸ் கட்சி தனது முழு ஆதரவையும் அளிக்கும் என்றார்.