"மின்னணு பொருள்கள் உற்பத்தியால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி'
By DIN | Published On : 20th February 2019 08:10 AM | Last Updated : 20th February 2019 08:10 AM | அ+அ அ- |

மின்னணு பொருள்கள் உற்பத்தியால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதாக இந்திய மின்னணு மற்றும் செமிகன்டக்டர் சங்கத்தின் தலைவர் ராஜேஷேராம் மிஸ்ரா தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை இந்திய மின்னணு மற்றும் செமிகன்டக்டர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 2 நாள் மின்னணு மற்றும் செமிகன்டக்டர் கண்காட்சியைத் தொடக்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தேசிய அளவில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியில் மின்னணு பொருள்கள் உற்பத்தி பெரும் பங்களிப்பை வகித்து வருகிறது. இந்தியாவில் இத்துறை மூலம் 2.5 லட்சம் பேர் நேரிடையாகவும், 10 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.
சர்வதேச அளவில் ஆண்டு தோறும் 5 சதவீத வளர்ச்சியைத் தொடர்ந்து இந்தத்துறை தொடர்ந்து பெற்று வருகிறது. வரும் 5 ஆண்டுகளில் 21 சதவீதம் வளர்ச்சியை அடைய முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துள்ளது. மத்திய அரசின் கொள்கை, திட்டங்கள் மின்னணு துறையில் வளர்ச்சிக்கு உதவியாக
உள்ளது.
மின்னணு துறையில் வளர்ச்சிக்காக பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அருகே 100 ஏக்கர் நிலத்தை தைவான் நாட்டின் மின்னணுத் துறை உற்பத்தி நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு ஒதுக்கித்தந்துள்ளது. இதேபோல தென்கொரிய நிறுவனங்களுடன் பிரதமர் மோடி 2 நாளில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்றார்.