பெங்களூரில் கார் தீ விபத்துக்கு மாநில உள்துறை அமைச்சரே பொறுப்பு

கார் தீ விபத்துக்கு மாநில உள்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலும், மாநில அரசுமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று

கார் தீ விபத்துக்கு மாநில உள்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலும், மாநில அரசுமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடியூரப்பா தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  பெங்களூரில் நடைபெற்ற பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சி வளாகத்தின் வாகன நிறுத்தத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 343 கார்கள் தீக்கு இரையாகியுள்ளன.  இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  விமானத் தொழில் கண்காட்சி வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மாநில அரசு மோசமாக தோல்வி அடைந்துள்ளது.  வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கவனிக்க வேண்டியது மாநில அரசின் அதிகார வரம்பாகும்.  கண்காட்சி நடைபெற்ற இடத்தின் உள்ளே,  வெளியே பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.  விமானப் படைத் தளத்தில் கண்காட்சியை நடத்துவது மட்டுமே மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் பொறுப்பாகும். 
தீ விபத்துக்கு முதல்வர் குமாரசாமி, உள்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் இருவரும் பொறுப்பேற்க வேண்டும்.  நமது நாட்டில் பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்துவரும் நிலையில்,  பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்காதது ஏன்?  பெரிய அளவிலான அல்லது அதிகப்படியான சொத்து சேதங்கள், உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தால்,  அதற்கு யார் பொறுப்பேற்பது?  வாகன நிறுத்தப் பகுதிக்கு தடையில்லாச் சான்றிதழை கொடுத்தவர்கள் யார்?  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகன நிறுத்தத்தில் தீயணைப்பு வாகனத்தை நிறுத்தாது ஏன்?  எந்தவொரு நிகழ்ச்சியை நடத்துவதானாலும்,  பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வுசெய்த பிறகே தடையில்லாச் சான்றிதழ் கொடுப்பார்கள்.  ஆனால்,  இங்கு ஏன் அந்த விதி பின்பற்றப்படவில்லை?  இந்த தீ விபத்துக்கான முழுப் பொறுப்பை மாநில அரசு தான் ஏற்க வேண்டும்.  மேலும்,  இந்த விபத்துக்கான காரணத்தை அறிந்துகொள்ள உயர்நிலை விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்.  விபத்துக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com