முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
பொதுத் தேர்வு: மாணவர்களின் பெயரை பதிவேற்றம் செய்யாத கல்லூரிகள் மீது நடவடிக்கை
By DIN | Published On : 28th February 2019 09:11 AM | Last Updated : 28th February 2019 09:11 AM | அ+அ அ- |

பொதுத்தேர்வுக்கு மாணவர்களின் பெயரை பதிவுசெய்ய தவறிய பியூ கல்லூரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பியூ
கல்வித் துறை இயக்குநர் பி.சி.ஜாபர் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூருவில்புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 2-ஆம் ஆண்டு பியூசி பொதுத்தேர்வுக்கு பதிவுசெய்யும் நடைமுறை பலமாதங்களுக்கு முன்பே தொடங்கி, நிறைவடைந்துவிட்டது. ஆனால், 2 ஆயிரம் மாணவர்கள் 2-ஆம் ஆண்டு பியூசி தேர்வை எழுதுவதற்கு கடைசி கட்டத்தில் பதிவுசெய்துள்ளனர். இது சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களின் கடமையாகும்.
உரியநேரத்தில் பொதுத் தேர்வுக்கு மாணவர்களைப் பதிவுசெய்யாமல் கல்லூரி முதல்வர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர். இந்த கல்லூரிகள், முதல்வர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.ஆர்.உமாசங்கர் கூறியது: கடைசிநேரத்தில் தேர்வுக்கு மாணவர்களைப் பதிவு செய்யக் கோரி கல்லூரி முதல்வர்கள் பியூ கல்வித் துறையை அணுகியபோது சந்தேகப்பட்ட துறையின் இயக்குநர் பி.சி.ஜாபர், கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தி, மாணவர்களின் நலன்கருதி அந்தவிண்ணப்பங்களை ஏற்றுக் கொண்டுள்ளார்.
கல்லூரி முதல்வர்களின் அலட்சியத்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதால், தேர்வுக்கு 3 நாள்கள் மட்டுமே இருந்தநிலையில் கடந்த பிப்.26-ஆம் தேதிவரை வந்த 2 ஆயிரம் விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு, தேர்வு எழுத அனுமதி தந்திருக்கிறோம்.
மேலும் சில கல்லூரி முதல்வர்கள், மாணவர்களின் தரவுகளை தவறாக பதிவுசெய்துள்ளனர். இதுவும் குழப்பத்திற்கு காரணமாகியுள்ளது. இதனால் திருத்தங்கள் செய்யவும் கடைசி நேரத்தில்பல விண்ணப்பங்கள் வந்தன. அதையும் மாணவர்நலன் கருதி செய்துள்ளோம். பாடங்கள் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது, கூடுதல் பாடங்களை சேர்ப்பது, மாணவர்களின் பெயரே இல்லாமல் இருந்தது, மொழிப்பாடங்கள் தவறாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது, தவறான பயிற்றுமொழி போன்ற தவறுகள் திருத்தப்பட்டன என்றார்.