முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
9 மஜத எம்.எல்.ஏ.க்களுக்கு வாரியத் தலைவர் பதவி: 5 அரசியல் செயலாளர்கள் நியமனம்
By DIN | Published On : 28th February 2019 09:13 AM | Last Updated : 28th February 2019 09:13 AM | அ+அ அ- |

மஜத எம்எல்ஏக்களுக்கு வாரியங்கள், கழகங்களின் தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதோடு, 5 பேருக்கு அரசியல் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அமைந்தபிறகு, அமைச்சர் பதவி கிடைக்காத எம்எல்ஏக்களை திருப்திப்படுத்த இணை அமைச்சர் பதவிக்கு நிகரான வாரியங்கள், கழகங்களின் தலைவர்பதவிகளை அளிக்கும் போக்கு காணப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் 19 வாரியங்கள், கழகங்களுக்கு தலைவர்களாக தங்கள் கட்சி எம்எல்ஏக்களை நியமித்துக் கொண்டது காங்கிரஸ்.
இதேபோல, ஒருசிலருக்கு அமைச்சருக்கு உதவிசெய்வதற்காக இணை அமைச்சர் பதவி என்று கருதப்படும் அரசியல் செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டன. மஜதவில் உள்ள 37 எம்எல்ஏக்களில் 10 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.
எஞ்சியுள்ள 27 எம்எல்ஏக்களில் பலரும் அமைச்சர் பதவிகிடைக்காத அதிருப்தியில் இருந்து வந்தனர். இவர்களை சமாதானப்படுத்தி, கட்சியின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள மஜதவை சேர்ந்த 12 எம்எல்ஏக்கள், ஒரு எம்எல்சி, ஒரு முன்னாள் எம்எல்ஏவுக்கு வாரியங்கள், கழகங்களின் தலைவர் பதவிமற்றும் அரசியல் செயலாளர் பதவிவழங்கி முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிருப்தியில் உள்ள மஜத எம்எல்ஏக்களை இழுக்க பாஜக முயற்சி மேற்கொண்டதை தொடர்ந்து, அவர்களை கைக்குள் வைத்திருந்த இந்நடவடிக்கையில் முதல்வர் குமாரசாமி ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
வாரியங்கள், கழகங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள மஜத எம்எல்ஏக்களின் பட்டியல் வருமாறு(பெயரும், பதவியும்): ராஜாவெங்கடப்பா நாயக்-தலைவர், கர்நாடகமாநில சுற்றுலாமேம்பாட்டுக்கழகம்; டி.சி.கெளரிசங்கர்-தலைவர், மைசூரு விற்பனை பன்னாட்டு நிறுவனம்; பி.சத்தியநாராயணா-தலைவர், கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம்; எல்.என்.நிசர்கா நாராயணசாமி-பெங்களூரு பன்னாட்டு விமானநிலைய ஆணையம்; கே.அன்னதானி-தலைவர், தேவராஜ் அர்ஸ் பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக்கழகம்; கே.எம்.சிவலிங்கேகெளடா-தலைவர், கர்நாடக வீடுவசதி வாரியம்; கே.மகேதேவா-தலைவர், கர்நாடகமாநில தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம்; முகமதுஜப்ருல்லாகான்-தலைவர், கர்நாடக சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம்.
காங்கிரஸ் கட்சியின் பரிந்துரையின்பேரில் நியமிக்கப்பட்ட கழகங்களின் தலைவர்கள்: டி.வெங்கடமணையா-கர்நாடக வனத் தொழில் கழகம்; பீமாநாயக்-தலைவர், கர்நாடக தண்டா மேம்பாட்டுக்கழகம்.
இவர்களைதவிர, மஜதவின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அரசியல் செயலாளர்கள் படியல் வருமாறு: முன்னாள் எம்எல்ஏ என்.எச்.கோனரெட்டி-முதல்வரின் 2-ஆவது அரசியல் செயலாளர்; தேவானந்த்ஃபுல்சிங் சவாண்- அரசியல் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை; கே.சீனிவாஸ்முர்த்தி- அரசியல் செயலாளர், கால்நடைப் பராமரிப்புத் துறை; எம்.சீனிவாஸ்-அரசியல்செயலாளர், கூட்டுறவுத்துறை, கே.ஏ.திப்பேசாமி- அரசியல் செயலாளர்,பொதுப்பணித்துறை.