வருகை குறைந்ததால் 2,500 மாணவர்கள் தேர்வெழுத அனுமதியில்லை
By DIN | Published On : 28th February 2019 09:11 AM | Last Updated : 28th February 2019 09:11 AM | அ+அ அ- |

வருகை விகிதம் குறைவாக இருந்ததால் 2,500 மாணவர்கள் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
2-ஆம் ஆண்டு பியூசி வகுப்புக்கான பொதுத்தேர்வு, மாநிலம் முழுவதும் மார்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தேர்வை எழுதும் வாய்ப்பை 2500 மாணவர்கள், வருகை விகிதம் குறைவாக இருந்ததால் இழந்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கல்வியாண்டில் மொத்த வேலைநாட்களில் 75 சதவீத வருகை மாணவர்களுக்கு இருக்க வேண்டியது கட்டாயமாகும். இது இல்லாவிட்டால் தேர்வு எழுதும் வாய்ப்பை மாணவர்கள் இழக்க நேரிடும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை கர்நாடக அரசின் பியூ கல்வித்துறை தீவிரமாக கடைப்பிடித்துவருகிறது. இந்தத் தகவலை மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகங்கள் அவ்வப்போது கூறி வந்துள்ளன. ஆனால், இதை பொருள்படுத்தாததால் அதற்கான விலையை மாணவர்கள் கொடுக்க நேர்ந்துள்ளது என்று பியூ கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும்கூறுகையில்,"மாணவர்களின் கல்லூரி வருகைப்பதிவு குறித்து அவ்வப்போது பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு வந்துள்ளது. இதை கவனிக்க தவறியதால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி 75 சதத்திற்கு குறைந்த வருகையுள்ள மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க இயலாதநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்' என்றார்.
தற்போது தேர்வு எழுத தவறும் 2500 மாணவர்களும், ஜூன் மாதம் நடக்கவிருக்கும் துணைத்தேர்வை எழுதும் வாய்ப்பையும் இழக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த மாணவர்கள் அடுத்த ஆண்டு புதிதாக கல்லூரியில் சேர்ந்து, கல்லூரிக்கு சென்று 75 சத வருகையிருந்தால் மட்டுமே தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வருகை குறைவாக இருப்பது தொடர்பாக 2018-ஆம் ஆண்டு செப்.5, நவ.30, டிச.31, 2019-ஆம் ஆண்டு ஜன.31-ஆம் தேதிகளில் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகங்கள் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். வருகை குறைவால் 2015-இல் 2050, 2016-இல் 4720, 2017-இல் 4204, 2018-இல் 3700 மாணவர்கள் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்திருந்தனர்.