1 முதல் 7-ஆம் வகுப்பு வரை கன்னடப் பயிற்று மொழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும்: கன்னட இலக்கியவாதி சந்திரசேகரகம்பாரா

ஒன்றாம் வகுப்பு முதல் 7-ஆம் வகுப்பு வரையில் கன்னடப் பயிற்று மொழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என்று

ஒன்றாம் வகுப்பு முதல் 7-ஆம் வகுப்பு வரையில் கன்னடப் பயிற்று மொழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என்று ஞானபீட விருது பெற்ற கன்னட இலக்கியவாதி சந்திரசேகரகம்பாரா தெரிவித்தார்.
கர்நாடக அரசு மற்றும் கன்னட சாஹித்யபரிஷத் சார்பில் தார்வாடில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 84-ஆவது கன்னட இலக்கிய மாநாட்டுக்கு தலைமை வகித்து, அவர் பேசியது: 
கன்னட மொழி நமது உயிர், வாழ்க்கை, மரபு, பண்பாடு அனைத்தும். எனவே, கன்னடமொழியைக் காப்பாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். கன்னட மொழியை இளையதலைமுறை மறந்துவருவது வேதனை அளிக்கிறது. இதற்கு முடிவுகட்ட 1 முதல் 7-ஆம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளிக் கல்வியை கன்னடப் பயிற்று மொழியில் மட்டும் வழங்க வேண்டும். 
இதை கட்டாயமாக்க ஆரம்பப் பள்ளிக் கல்வியை அரசுமயமாக்க வேண்டும். 8-ஆம் வகுப்பு முதல்தான் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இதை செய்யாவிட்டால் மாநில மொழிகளுக்கு எதிர்காலமே இல்லாத நிலை உருவாகிவிடும். அரசுப் பள்ளிகளில் மட்டுமே தற்போது கன்னடம் போதிக்கப்படுகிறது. எனவே, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தினால், மாணவர்களின் வருகை அதிகரிக்கும். 
தாய்மொழியில் கல்வியை வழங்க உறுதியான நடவடிக்கைகளில் அரசுகள் ஈடுபட
வேண்டும். 
கர்நாடகத்தை இரண்டாக பிளவுபடுத்த ஒருசிலர் விருப்பம் தெரிவித்துவருகிறார்கள். இதற்கு எந்தகாரணத்தை முன்னிட்டும் இடமளிக்கக்கூடாது. 1956-ஆம் ஆண்டுக்கு முன்பாக கன்னடம் பேசும் மக்கள் வெவ்வேறு ஆட்சிமுறைகளின் கீழ் இருந்ததை கன்னடர்கள் நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போது கன்னடர்களின் நிலை எப்படி இருந்தது? கன்னடம்பேசும் மக்கள் வாழும் நிலப்பகுதிகளை ஒன்றாக்கி கர்நாடகமாக உருவாக்கி தந்திருக்கிறோம். 
இதற்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் பலர் பல்வேறு இன்னல்களை தாங்கிக்கொண்டுள்ளனர். அந்த தியாகத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேடுக்கொள்கிறேன். கர்நாடகத்தை பிளவுபடுத்தும் எண்ணம் யாருக்கும் வரக்கூடாது. கர்நாடகமாகி உருவெடுத்து 70 ஆண்டுகளானபிறகு ஆட்சிமொழியாக கன்னடத்தை முழுமையாக அமல்படுத்த இயலவில்லை. 
கன்னட ஆட்சி மொழியை அமல்படுத்த ஏராளமான அரசாணைகளை கொண்டுவந்தும், அவை அமலுக்கு வராததால் வேதனை அடைந்திருக்கிறோம். ஆங்கிலேயர்கள் அளித்த ஆங்கிலத்தை தான் இன்றைக்கும் கொண்டாடிவருகிறோம். கன்னடர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்துவருவதால், கன்னடம் தற்போது உலகமொழியாகவும், பண்பாடு தற்போது உலகப்பண்பாடாகவும் மாறியுள்ளது. 
கன்னட மொழியை, பண்பாட்டை, கலையை கட்டிக்காக்கவேண்டிய கடமை கர்நாடக அரசுக்கு உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், வணிகம் அனைத்திலும் கன்னடமொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கன்னடமொழி பள்ளிகளை மூடும் பணி நடந்துவருகிறது. இதற்கு பதிலாக கிராமங்கள்தோறும் ஆங்கிலப்பள்ளிகள் முளைத்துவருகின்றன. இந்தபள்ளிகளை அரசியல்வாதிகள், வியாபாரிகள் நடத்துகிறார்கள். 
கடந்த 4 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் கன்னடம் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 13 லட்சமாக குறைந்துள்ளது. ஆனால், ஆங்கிலப் பள்ளிகளில் ஆங்கிலம் மாணவர்களின் எண்ணிக்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு கன்னடப் பயிற்று மொழிப் பள்ளிகள் வெளிப்படையான ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிகளாக மாறி வருகின்றன. 
2018-19-ஆம் கல்வியாண்டில் 3.5 லட்சம் மாணவர்கள் ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இது கன்னடமொழிக்கு ஆபத்தானை எதிர்காலத்தை உருவாக்க போகிறது.எனவே, கன்னடமொழியை ஆபத்தில் இருந்துகாப்பாற்ற வேண்டும என்றார். 
முன்னதாக, சந்திரசேகரகம்பாரா ஊர்வலமாக மேடைக்கு அழைத்துவரப்பட்டார். 3 நாள்கள் நடக்கவிருக்கும் இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான கன்னட இலக்கியவாதிகள் கலந்து கொண்டனர்.

"ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிகள் சோதனை முயற்சியில்தான் அரசு தொடங்குகிறது'
ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிகளை சோதனை முயற்சியில்தான் அரசு தொடங்குகிறது என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
கர்நாடக அரசு மற்றும் கன்னட சாஹித்யபரிஷத் சார்பில் தார்வாடில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 84-ஆவது கன்னட இலக்கிய மாநாட்டை தொடக்கிவைத்து, அவர் பேசியது: கர்நாடகத்தில் ஆயிரம் ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிகளைத் திறக்கப்போவதாக பட்ஜெட்டில் ஏற்கெனவே அறிவித்திருக்கிறேன். இதற்கு கன்னட இலக்கியவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்தவிவகாரம் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 
ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிகளை சோதனைமுயற்சியில்தான் அரசு தொடங்கவிருக்கிறது. இந்தத் திட்டம் தொடர்பான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள், கருத்துகளை வரவேற்கிறேன். ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிகளைத் தொடங்க காரணம் இருக்கிறது. 
கர்நாடகத்தில் தகவல் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களின் அடிப்படையிலான தொழில்கள் பெருகியுள்ளன. இத்தொழிலகங்களில் பணியாற்றுவதற்கு ஆங்கில மொழியறிவு அவசியமாகிறது. இதுபோன்ற நிறுவனங்களில் பெரும்பாலும் வேலை செய்வோர் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆங்கிலம் தெரியவில்லை என்ற காரணத்தால் ஊரகப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வேலைவாய்ப்பை இழக்கிறார்கள். 
இதனால் கன்னடப் பயிற்று மொழியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. கல்வித் துறையின் கடந்த 10 ஆண்டுகால புள்ளிவிவரங்களை கவனித்தால், ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்வது குறைந்து வருகிறது. இதன் அடிப்படையில் ஆங்கிலப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள் விரும்புவது உறுதியாகிறது. 
இன்றைய காலக்கட்டத்தில் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மட்டுமே. இவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார பின்னடைவு காரணமாக அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். தாய்மொழிக் கல்விதான் சிறந்தது என்று குவெம்பூ கூறியிருக்கும் கருத்தை முழுமையாக நான் ஏற்கிறேன். 
ஆனால், எந்த பயிற்று மொழிப் பள்ளியில் தனது குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டுமென்பது பெற்றோரின் விருப்பம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பை கவனிக்க தவறக்கூடாது. இவை நமக்கு கசப்பானதாக உள்ளது. அதன்காரணமாகவே, பொருளாதாரத்தில்பின் தங்கிய குழந்தைகளுக்கு நியாயம் வழங்கும் முகமாக ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிகளைத் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளுக்கு குழந்தைகளை ஈர்க்க விரும்புகிறோம். மேலும், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து வகையான பள்ளிகளிலும் கட்டாயமாக கன்னடம் கற்பிக்க உத்தரவிட்டுள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com