சுடச்சுட

  

  பிரதமர் மோடியின் பேச்சுக்கு முதல்வர் குமாரசாமி பதிலடி

  By DIN  |   Published on : 13th January 2019 03:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பிரதமர் மோடியின் பேச்சுக்கு முதல்வர் குமாரசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
  புது தில்லியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கர்நாடகத்தில் ஒரு முதல்வர் கூட்டணி ஆட்சி நடத்துகிறார். கூட்டணி கட்சியான காங்கிரஸ் தன்னை நெருக்கடிக்கு ஆளாக்குவதால், தான் ஒரு எழுத்தரை போல பணியாற்றுவதாக அவர் கூறியிருக்கிறார் என முதல்வர் குமாரசாமி குறித்து பேசியிருந்தார். பிரதமர் மோடியின் பேச்சு கர்நாடகத்தில் அரசியல் கட்சிகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. முதல்வர் குமாரசாமியை எழுத்தர் என்று கூறியிருப்பது, அவரது பதவியை அவமதிக்கும் செயலாகும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
  பிரதமர் மோடிக்கு பதிலளித்து முதல்வர் குமாரசாமி தனது சுட்டுரை பக்கத்தில், நான் கூறாத கருத்தை முன்வைத்துக் கொண்டு பிரதமர் மோடி கருத்து கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக தவறாக கருத்து தெரிவித்திருந்த பிரதமர் மோடி, தற்போது 2-ஆவது முறையாகவும் அதே வேலையை செய்துள்ளார். பிரதமர் மோடியின் கருத்துகளால் கூட்டணி அரசின் வளர்ச்சி குறித்த நோக்கத்தை தடுக்கமுடியாது என குறிப்பிட்டுள்ளார்.
  இதனிடையே, முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான எச்.டி.தேவெ கெளடா, தனது வசதிக்கேற்ப கருத்துகளை பிரதமர் மோடி மாற்றியமைத்துக் கொண்டுள்ளார். கர்நாடகத்தில் பாஜகவுடன் மஜத கூட்டணி அமைத்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பிரதமர் மோடியால் பகிர்ந்துகொள்ள இயலுமா? என்றார் அவர்.
  முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறுகையில், கர்நாடகத்தில் கூட்டணி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மஜதவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே நிலவும் கூட்டணி குறித்து பிரதமர் மோடி பேசுவதற்கு அவசியமே இல்லை. காங்கிரஸுக்கு எதிராக மஜதவை தூண்டிவிடவே அவர் அப்படி பேசியிருக்கிறார். கூட்டணி கட்சிகளிடையே எந்த பிரச்னையும் இல்லை என்றார் அவர். 
  மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இது போன்ற கருத்துகளை கூற பிரதமர் மோடிக்கு தார்மீக உரிமையில்லை. தான் பேசும் வார்த்தைகளின் கனத்தை புரிந்துகொண்டு பிரதமர் மோடி பேசவேண்டும். மனதில் நினைத்ததை எல்லாம் பேசுவது பிரதமர் பதவிக்கு அழகல்ல என்றார்.
  அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்திருப்பதால், பிரதமர் மோடி மனக்குழப்பத்தில் இருப்பார் போல தெரிகிறது. அதனால் தான் இதுபோன்ற கருத்துகளை கூறுகிறார். மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறப் போவதில்லை என்பதால் இவ்வாறு கூறியிருக்கிறார் என்றார் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர்.
  கர்நாடக காங்கிரஸ் பிரசாரக் குழுத் தலைவரான எச்.கே.பாட்டீல் கூறுகையில், முதல்வர் குமாரசாமியை காங்கிரஸ் எப்படி நடத்துகிறது? என்பதை அரசியல் கருத்தாக பிரதமர் மோடி கூறியிருக்கிறார். இந்திய வெளியுறவுக் கொள்கைகள் குறித்து தனது அமைச்சரவை சகாவின் நம்பிக்கையை பெறாத, தனது கட்சியின் மூத்தத் தலைவர்களான எல்.கே.அத்வானி உள்ளிட்டோரை மதிக்காத பிரதமர் மோடி, காங்கிரஸ் பற்றி பேச அருகதையற்றவர் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai