சுடச்சுட

  

  மேடைப் பேச்சுக்களால் மட்டுமே நாட்டை மாற்றியமைக்க முடியாது :சமூக ஆர்வலர் அண்ணா ஹாசரே

  By DIN  |   Published on : 13th January 2019 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மேடைப் பேச்சுக்களால் மட்டுமே நமது நாட்டை மாற்றியமைத்துவிட முடியாது என சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தெரிவித்தார்.
  சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற இளைஞர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியது: சுவாமி விவேகானந்தர், நமது நாடு கண்ட புதுமையான துறவி. இளைஞர்கள் மீது விவேகானந்தருக்கு அபார நம்பிக்கை இருந்தது. நமது நாட்டை இளைஞர்களால் மட்டுமே மாற்றியமைக்க முடியும் என்பதில் ஆழமான நம்பிக்கையை வைத்திருந்தார். இளைஞர்கள் மனது வைத்தால் நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்ல இயலும்.
  நமது கிராமங்களை முன்னேற்றாமல், நமது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்றாகும். நமது நாட்டின் 50 சதவீத மக்கள் பட்டினியால் தவிக்கிறார்கள். பட்டினியால் உழல்பவனுக்கு சோறு முக்கியமே தவிர, கொள்கை அல்ல. இந்த சூழ்நிலையில், பசித்த வயிற்றுக்கு உணவளிக்க அரசு கவனம் செலுத்தவேண்டும்.
  இன்றைய இளைஞர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். மகாத்மா காந்தி மற்றும் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை இன்றைய இளைஞர்கள் உள்வாங்கிக்கொண்டு, அதன்படிசெயல்பட்டால் நமது நாட்டின் வளர்ச்சிக்கு யாரையும் நம்பியிருக்க வேண்டியதில்லை. நல்லதை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, கெட்டதை யாரும் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். சுவாமி விவேகானந்தரை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலவில்லை. 
  ஆனால், எடுத்த காரியத்தை எப்படி முடிக்க வேண்டுமென்பதை விவேகானந்தரிடம் கற்றுக்கொண்டேன். எனது 25-ஆவது வயதில் மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளுக்கு ஆள்பட்டுவிட்டேன். அதன்பிறகுதான் சமூக சேவையில் ஆர்வமாக செயல்பட தொடங்கினேன். திருமணமும் செய்துகொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே இருந்துவிட்டேன். எனது குடும்பத்தினரை சந்தித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எனது தம்பிகளின் குழந்தைகளின் பெயரே எனக்கு தெரியவில்லை. நன்கொடையாக எனக்களித்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மக்களுக்கு அளிக்கவே அறக்கட்டளை அமைத்து, அதற்கு அளித்துவிட்டேன்.
  குடும்பத்தினரை இளைஞர்கள் நேசித்தாலும், நாட்டு மக்கள் அனைவரையும் குடும்பம் போல கருத வேண்டும். வெற்று வார்த்தைகள், வெற்று வாக்குறுதிகள், மேடைப் பேச்சுகள் மூலம் நமது நாட்டை மேம்படுத்த இயலாது. சொல்லும், செயலும் ஒன்றுபடும் போதுதான் நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகும். நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்கள் அதீத அக்கறை செலுத்தி பங்காற்ற வேண்டும் என்றார் அவர்.
  நிகழ்ச்சியில், மாதா விவேகாமயி, சுனில் அம்பேத்கர், இந்திய அறிவியல் கழக இயக்குநர் ருத்ரபிரதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai