டி.ஆர்.டி.ஓ.வின் புதுமை யோசனைப் போட்டி: ரூ.10 லட்சம் வரை பரிசு

இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) சார்பில் புதுமை யோசனைப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) சார்பில் புதுமை யோசனைப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஆர்டிஓ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் கருத்துருக்களையும், புதிய சிந்தனைகளையும் பயன்படுத்தி நாட்டின் பாதுகாப்பு செயல்திறனை அதிகரிக்க பொதுமக்களிடமிருந்தும், ஆரம்பநிலை தொழில்முனைவு (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களிடமிருந்தும் புதுமையான யோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
இந்த போட்டியில் தேர்ந்தடுக்கப்படும் யோசனைகளுக்கு ரூ.10 லட்சம் வரை பரிசு உண்டு. மேலும் ராணுவ விஞ்ஞானிகளின் வழிகாட்டுதலும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.
யார் விண்ணப்பிக்கலாம்?
18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் இதில் கலந்துகொள்ளலாம். இந்திய தொழில்கொள்கை மற்றும் முன்னேற்றத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியர்களால் நடத்தப்படும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இதில் பங்கு பெறலாம்.
பரிசுத் தொகை
தனிநபர்களுக்கும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கும் தனித்தனியாக மூன்று பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் வெல்லும் தனிநபர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.4 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும். நிறுவனங்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ.8 லட்சமும், மூன்றாவது பரிசாக ரூ.6 லட்சமும் வழங்கப்படும்.
தேர்வுமுறை
இரண்டடுக்கு தேர்வு முறையில் யோசனைகள் தேர்ந்தெடுக்கப்படும். துறைசார்ந்த வல்லுநர்கள் முதல் சுற்றில் யோசனைகளை ஆய்வு செய்வர். பிறகு மற்றொரு வல்லுநர் குழு பரிசுக்குரிய யோசனைகளை தேர்ந்தெடுக்கும்.
எந்தெந்த தலைப்புகளில் விண்ணப்பிக்கலாம்? ரோபோ
விலங்குகளைப் போல பல கால்களுள்ள ரோபோக்கள் எந்த நிலப்பரப்பிலும் இயங்கும். இந்த பல கால் ரோபோ தொழில்நுட்பம், சமநிலையில் ரோபோக்களை இயக்கும் நுட்பம், அதனைச் சார்ந்த உணரி நுட்பங்கள் மற்றும்  கட்டுப்பாடு ஆகியவைகளை பற்றிய புதுமையான யோசனைகள்.
எதிர்காலத்தில் பலவகைப்பட்ட ஆளில்லா தரை வாகனங்களும் குழுவாக இயங்கி ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை செயல்படுத்த வேண்டும். கருவிகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, கட்டுப்பாடு, அவைகளின் சுற்றுப்புறத்தை அறியும் திறன் ஆகியவைகளை பற்றிய யோசனைகள்.
பறவைகள் கூட்டமாக பறப்பதை போல எதிர்காலத்தில் ஆளில்லா விமானங்களும் கூட்டாக பறந்து கண்காணித்து, இலக்கை அடையாளப்படுத்தி  தாக்குதல் நடத்தும். இது தொடர்பான புதுமையான யோசனைகள்.
ஆளில்லா விமானங்களும், தரை சார்ந்த ரோபோக்களும் கூட்டாக இயங்கி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட வேண்டிய தேவை உண்டு. இவை சார்ந்த யோசனைகள்.
இணைய தாக்குதல் தடுப்பு
இணைய தாக்குதல்களை எதிர்கொள்ள ஆழ்கற்றல், கருவிகற்றல் நுட்பங்கள் சார்ந்த இணைய தாக்குதல் தடுப்பு யோசனைகள். ராணுவவீரர் அணிந்து கொண்டு செல்லும் வகையிலான தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் சார்ந்த யோசனைகள். எல்லை பாதுகாப்புப் பணியில் பயன்படும் அறிவாற்றலுடைய உணரிகளும், அவை சார்ந்த தொழில்நுட்பங்களை பற்றிய யோசனைகள்.
ஏவுகணை தொழில்நுட்பம்
ஏவப்படும் வரை ஏவுகணைகளின் இறக்கை, வால், கட்டுப்பாட்டு பரப்புகள் மடித்து வைக்கப்பட்டிருக்கும். இப்பகுதிகளை இயக்கும் கருவிகள் அளவில் சிறியதாக்கப்பட்டால் ஏவுகணையும் மிகச்சிறியதாக வடிவமைக்கப்படலாம். இது தொடர்பான யோசனைகள்.
காம்போஸிட்ஸ் எனப்படும் கூட்டுக்கலவை விமானத்திலும் ஏவுகணைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இக்கூட்டுக் கலவையால் செய்யப்பட்ட பாகங்களின் புதுமையான இணைப்பு தொழில்நுட்ப யோசனைகள்.
மருத்துவ தொழில்நுட்பங்கள்
போர்க்களத்தில் காயம்பட்டவரை உயிர்காக்க ரத்தத்தை உறைய வைக்கும் நுட்பங்கள் தேவை. இவை தொடர்பான ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. பிராண வாயு (ஆக்சிஜன்) குறைவு படும் உறுப்புகளுக்கு திசுக்களின் மூலமாக செயற்கையாக ஆக்சிஜன் கொண்டு செல்லும் நுட்பம் தேவை. இதைச் சார்ந்த யோசனைகள் தேவைப்படுகின்றன.
மேற்சொல்லப்பட்ட துறைகளைச் சாராத இதுவரை கற்பனை செய்யப்படாத, சிந்திக்கப்படாத எந்த யோசனையையும் அனுப்பலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
உங்கள் யோசனையை 500 வார்த்தைகளில் எழுதி ‌w‌w‌w.‌d‌r‌d‌o.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தன்குறிப்பு, யோசனையைப் பற்றிய சுருக்கம், யோசனையை எப்படி செயலாக்குவது என்ற திட்டம், எவ்வளவு காலம் தேவைப்படும், யோசனை இந்திய பாதுகாப்புக்கும், விண்வெளிக்கும் எந்த வகையில் உதவும் போன்ற விவரங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். பரிசுத்தொகை எப்படி பயன்படுத்தப்படும் என்பதையும் குறிப்பிட வேண்டும். தனிநபரோ, நிறுவனமோ அதிகபட்சமாக ஐந்து யோசனைகளை அனுப்பலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப். 28-ஆம் தேதி ஆகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com