கோவா தமிழ்ச் சங்கத்துக்கு நிர்வாகிகள் தேர்வு
By DIN | Published On : 29th January 2019 05:33 AM | Last Updated : 29th January 2019 05:33 AM | அ+அ அ- |

கோவா தமிழ்ச் சங்கத்துக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கோவா மாநிலம், பனாஜியில் ஞாயிற்றுக்கிழமை கோவா தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 2019-20-ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் தமிழ்ச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய தலைவராக பழனிச்சாமி, துணைத் தலைவராக பரமசிவன், பொதுச் செயலராக சிவராமன், துணைச் செயலராக சிதம்பரம், பொருளாளராக செல்வன் ஜெபராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட பொதுச் செயலர் சிவராமன், சங்கத்தின் வளர்ச்சிக்கு முன்னெடுக்க வேண்டிய எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார். மேலும் பனாஜியில் மண்டோலி ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள 51 கி.மீ. நீளமுள்ள பாலத்துக்கு கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கரின் பெயரைச் சூட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பொங்கல் விழா
இதைத் தொடர்ந்து, சங்கத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐஏஎஸ் அதிகாரி மேனகா, ஐஆர்எஸ் அதிகாரி க.அன்பழகன், தூர்தர்ஷன் இணை இயக்குநர் முனைவர் எஸ்.ஆர்.பி.ஹுசைனி, பேங்க் ஆஃப் பரோடா வங்கி தலைமை மேலாளர் வின்சென்ட் ஆகியோர் கலந்துகொண்டு, சிறப்புரையாற்றினர்.
ஐஏஎஸ் அதிகாரி மேனகா பேசுகையில், தமிழ்ச் சங்கத்தை நல்ல முறையில் வளர்த்தெடுக்க ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்கு கட்டாயம் தமிழ் கற்றுத்தர வேண்டும். இதை வீட்டில் நாமே செய்துகொள்ளலாம் என்றார்.
முன்னதாக, துணைச் செயலர் சிதம்பரம் அனைவரையும் வரவேற்க, கோவிந்தராஜன் நன்றி கூறினார். தமிழ்ச் சங்க குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியை தீப்தாரூபா சுந்தரம் தொகுத்து வழங்கினார்.